மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் தெலுங்கானாவில் தேர்வர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனர். இதன்காரணமாக நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே உத்தரவிட்டது.
முன்னதாக, அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களின் பதிவிக்காலம் முடிந்தவுடன், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக நிதிச் சேவைகள் துறை நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் ராணுவ விவகாரங்கள் துறை இணை செயலர் அக்னிபத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அக்னி வீரர்களின் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப
அவர்களுக்கு சலுகைகள் / தளர்வுகள் ஆகியவற்றின் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆராய வேண்டுமென இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், அக்னி வீரர்களுக்கு திறனை மேம்படுத்த கடன் வசதிகள், வணிகம் மேற்கொள்வதற்கும், சுய தொழில் அமைப்பதற்குமான கல்வி ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான சாத்தியக் கூறுகளை வங்கிகள் ஆராய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய அரசு திட்டங்கள் மூலமும் அக்னி வீரர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: அக்னி வீரர்களின் வயது உச்சவரம்பை 23 ஆக உயர்த்திய மத்திய அரசு
இதற்கிடையே, நான்கு ஆண்டுகள் முடித்த அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, விரிவான திட்டங்களை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கல்வி சார்ந்த முன்னெடுப்புகள்:
12ம் வகுப்பு சிறப்பு பாடநெறி:
அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய திறந்த நிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தில் சிறப்பு திட்டத்திற்கு மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை (Department of School Education & Literacy) ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அக்னிவீரர்கள், சிறப்பு பாடநெறி மூலம் (Special Course) 12ம் வகுப்பில் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.இந்த சான்றிதழ் வேலைவாய்ப்பு மற்றும் உயர்க்கல்வி பயில்வதற்கு அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை அக்னிவீரர்கள் போதிய கல்வி அறிவை பெறுவதற்கும் பின்னர் சமூக வாழ்க்கையில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்வதற்கு திறனை உருவாக்கவும் பயன்படும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம்.. 4 ஆண்டு பணி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்... முழு விவரம்
பட்டப்படிப்புக்கு சிறப்பு பாடநெறி: அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில் சிறப்பு பாடநெறியை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உருவாக்க முன்வந்துள்ளது.

அக்னிவீரர்கள் ஈட்டிய திறனை இந்திய கல்வி அமைச்சகம் அங்கீகரிக்கும்.
அதன்படி, அக்னிவீரர்கள் பாதுகாப்புத் துறையில் ஈட்டிய 50% தரமதிப்பீடுகள் (Data Credits) அடிப்படையிலும்,பிரத்தியேக பாடங்கள் வழியாக ஈட்டிய 50% தரமதிப்பீடுகள் அடிப்படையிலும் அக்னிவீரர்கள் இளம்நிலை பட்டம் பெறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.