பொதுப் பிரிவில் கடைசி மதிப்பெண் பெற்று தேர்வான நபரை விட, கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த நபர், பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்குப் பின்னணி:
கடந்த 2018ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் Telecom Technical Assistants காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இதில், அஜ்மர் தொலைத்தொடர்பு வட்டத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிமுறையின் கீழ்காணும் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
தொலைத்தொடர்பு வட்டம் (secondary Swithching Area) | No.of Post | UR | OBC | SC | ST | PH | EX-service |
அஜ்மர் | 12 | 5 | 4 | 2 | 1 | 0 | 1 |
எழுத்துத் தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று, இடஒதுக்கீட்டு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், எழுத்துத் தேர்வில், பொதுப் பிரிவினரில் ஒருவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறவில்லை. அதேசமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் நான்கு பேர் தங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தனர்.
பெயர் | மதிப்பெண் | சதவிகிதம் | வகுப்பு |
அலோக் குமார் யாதவ் | 79.75 | 39.87 | ஓபிசி |
தினேஷ் குமார் | 77 | 38.5 | ஓபிசி |
அல்கா சைனி | 72.75 | 36.25 | ஓபிசி |
வெட் பிரகாஷ் (மனுதாரர்) | 68.5 | 34.24 | ஓபிசி |
மனுதாரர், வெட் பிரகாஷ் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், எழுத்துத் தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தகுதி பெறவில்லை என்பதாலும், காலிப்பணியிடம் நிரப்பப்படாத சூழல் இருப்பதாகவும் கூறி, பிஎஸ்என்எல் நிர்வாகம் பொதுப் பிரிவினருக்கு 30% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 23% ஆகவும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வரம்பை தளர்த்தியது.
இந்த புதிய வழிமுறைகளின் படி, பொதுப்பிரிவு வகுப்பினரில் 5 பேர் தகுதி பெற்றனர். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வெட் பிரகாஷ் நடுவர் தீர்பாயத்திடம் முறையிட்டார்
அவர், தனது மனுவில், " விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்காக மட்டும் குறைந்தபட்ச மதிப்பெண்களை மாற்றியமைத்தது செல்லாதது ஆகும். குடிமக்கள் அனைவருக்கும் சமன்மையான வாய்ப்பு நலம் இருத்தல் வேண்டும்.
ஏற்கனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இரண்டு தேர்வர்கள் (அலோக் குமார் யாதவ் மற்றும் தினேஷ் குமார்) பொது முறைகளின் (general turn) மூலம் நிரப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில், தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியுடையவராவார். அவர்கள், பொதுப் பிரிவில் தேர்வாகி இருக்க வேண்டும்.இதன் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது.
இந்த மனுவை விசாரித்த நடுவர் தீர்ப்பாயம், ஏதேனும் வாய்பிருந்தால், பாதிக்கப்பட விண்ணப்பதாரருக்கு உடனடியாக சமவாய்ப்பை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிர்வாகம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட் டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு தேர்வர்கள் பொதுப் பிரிவில் தேர்வாக தகுதியடையவர்கள். அலோக் குமார் யாதவ் மற்றும் தினேஷ் குமார் இருவரையம், பொதுப்பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும். அதனால் உருவாகும், காலி இடத்தை, மனுதாரரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்திரா சாஹ்னி vs இந்திய அரசு வழக்கை சுட்டிக் காட்டி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று நேற்று தீர்ப்பளித்தது. இருந்தாலும், அலோக் குமார் யாதவ், தினேஷ் குமார் ஆகிய இருவரும் பொதுப்பிரிவு பட்டியலில் சேர்க்கப்படுவதால், ஏற்கனவே வாய்ப்பைப் பெற்று பணி செய்து கொண்டிருக்கும் இரண்டு பேர் தகுதிநீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, முழுமையான நீதி நிலையுறச் செய்வதற்கு உச்சநீதிமன்றம் 142-வது சரத்தின் கீழ் அவர்களை எந்தவகையிலும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
பொதுப்பிரிவில் கடைசி மதிப்பெண் பெற்று தேர்வான நபரை விட, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த விண்ணப்பத்தாரர், பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடைவர் என்றும் தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OBC Reservation, Reservation