Home /News /employment /

குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே சாதனை படைத்த புதுக்கோட்டை மாணவி பவானியா

குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே சாதனை படைத்த புதுக்கோட்டை மாணவி பவானியா

காட்சிப் படம்

காட்சிப் படம்

பணியை திறம்பட செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க என்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுவேன் - பவானியா

    புதுக்கோட்டை அருகே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கிராமத்து பெண் ஒருவர் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று விடாமுயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ச்சி அடைந்திருப்பது அனைவரும் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு ரேவதி, வனிதா, பவானியா, திலகா ஆகிய நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தேநீர் கடை நடத்தியும் அவ்வப்போது அவர் மற்றும் அவரது மனைவி வீரம்மாள் விவசாய கூலி வேலை செய்தும் நான்கு மகள்களையும் படிக்க வைத்துள்ளனர்.

    குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற பவானியா


    இவரது மூத்த மகள்கள் ரேவதி, வனிதா ஆகியோரை திருமணம் செய்து கொடுத்த நிலையில் நான்காவது மகள் திலகா தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

    இந்நிலையில் இவரது மூன்றாவது மகள் பவானியா தனது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளிலேயே தமிழ் வழி கல்வியில் படித்துள்ளார். உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை ஏ.மாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் இளங்கலை அறிவியல் பிரிவில் கணிதத்தை புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் படித்துள்ளார்.

    பவானியா மற்றும் குடும்பத்தினர்


    தொடக்கம் முதலிலேயே நன்றாக படித்து வந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் படித்த பள்ளியில் அவர் தான் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார்.

    இந்நிலையில், இவர் சிறு வயதிலிருந்தே குடிமைப்பணி தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்ற இலக்கோடு படித்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த இவர் கடைசியாக நடந்த குருப் ஒன் தேர்வை முதல்முறையாக எழுதியுள்ளார். வேறு எங்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பாடப் புத்தகத்தை படித்து அத்தேர்வை எழுதிய பவானியா முதல் முயற்சியிலேயே முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.‌

    அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வை  எதிர்கொள்ள சென்னையில் உள்ள ஒரு மையத்தில் சிறப்பு வகுப்பில் சேர்ந்த இவர் கொரோனா பொதுமடக்கத்தால் இரண்டு மாத காலத்திலேயே அங்கிருந்து ஊர் திரும்பி பின்னர் வீட்டிலேயே படித்துள்ளார். அதன் பிறகு நடைபெற்ற எழுத்து தேர்விலும் நேர்முகத் தேர்விலும் துணை ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு அந்த தேர்வை எழுதிய இவர் சற்று மதிப்பெண் குறைந்ததால் தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் காவல் துணை கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.

    பவானியா


    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சிக்கு செல்லக்கூடிய இவரை கிராம மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    மேலும் இது குறித்து பவானியா கூறுகையில்:-
    தன்னை என் பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு படிக்க வைத்தனர். தொடக்கக்கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்தையும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்து நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தேன். சிறுவயதிலிருந்தே ஆட்சியராக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த எனக்கு  கல்லூரி படிப்பை முடித்தவுடன் முதலில் குரூப் ஒன் தேர்வு அறிவிக்கப்பட்டதால் அந்த தேர்வை எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்தேன். எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்து படித்து அந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து அதன் பிறகு நடக்கும் தேர்வுக்கு மட்டும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் பயிற்சிக்கு சேர்ந்த நிலையில் கொரோனா பொதுமடக்கத்தால் இரண்டு மாத காலம் மட்டுமே படித்த நிலையில் பின்னர் ஊர் திரும்பி வீட்டிலேயே படித்து தற்பொழுது தேர்ச்சி பெற்றுள்ளேன், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    தொடக்கக்கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்


    எனது குடும்பத்தினருக்கும் எங்கள் கிராம மக்களுக்கும் நான் தேர்ச்சி அடைந்தது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. போட்டித் தேர்வு எதிர்கொள்பவர்கள் தன்னம்பிக்கையடனும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். நமக்கான மதிப்பெண்களை குறைந்த அளவில் தான் எடுப்போம் என்று நினைக்காமல் முழு மதிப்பெண்ணையும் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழு கவனம் செலுத்தி படித்தால் கட்டாயம் என்னை போல் தேர்ச்சி அடையலாம்.  நான் தற்பொழுது துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ச்சி அடைந்துள்ளேன் எந்த ஒரு பணியிலும் பனிக்கென்று ஒரு கடமை உள்ளது அந்த கடமை படி நான் பணியை திறம்பட செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க என்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுவேன் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்ககுரூப்-1 பதவிக்கான தேர்வில் அசத்திய பெண்கள்.. 66 பணியிடங்களில் 57 இடங்களை பெற்றனர்

    இதுகுறித்து பவானியாவின் பெற்றோர் கூறுகையில்,"சிறுவயதிலிருந்தே தனது மகள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்ததாகவும் அதற்கு தனியாக படிக்க வைப்பதற்கு தன்னிடம் பொருளாதாரம் இல்லை அதனால் அது வேண்டாம் என்று கூறிய நிலையிலும் வீட்டிலிருந்தே விடா முயற்சியாக தொடர்ந்து படித்து தற்பொழுது அவர் நினைத்தபடி அரசு பணியில் சேர உள்ளார் இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:

     

    ர.ரியாஸ்
    புதுக்கோட்டை
    செல்: 9943816324
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி