Prime Minister Employment Generation Scheme: குறு, சிறு, நடுத்தற தொழில்கள் (எம்எஸ்எம்இ) தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. 2016-16 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் இயங்கி வரும் சுமார் 49.48 லட்சம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கு வருகின்றன.
இருப்பினும், இதில் 99% க்கும் மேலானவை, 1 கோடிக்கும் குறைவான மூலதனங்களை கொண்டு இயங்கும் குறு நிறுவனங்களாக உள்ளன. சொற்ப எண்ணிக்கையிலான (0.01% ) நிறுவனங்கள் மட்டுமே நடுத்தர நிறுவனங்கள் என்ற வரையறைக்குள் வருகின்றன.
மேலும், மொத்த எண்ணிக்கையில் 5%க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே வங்கிகள் வாயிலாக கடன் உதவிகளை பெற்று இயங்குகின்றன. 81.32% நிறுவனங்கள் சுய சார்பாக (Self - financed) இயங்குவதாகவும், 13.96% நிறுவனங்கள் முறைசார்பற்ற முறையில் அதிக வட்டிக்கு கடன் உதவிகளை பெற்று வருகின்றன.
எனவே, அரசு வேலை தேடும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக மாறவும், ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவும், தன்னிறைவு அடையவும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவும் மூலதனம் அவசியமானதாகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குல் திட்டம்:
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
கிராம மற்றும் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க முறையே ரூ.25 இலட்சம், ரூ.10 இலட்சம் வரை வங்கிக் கடன் (தேசியமயமேக்கப்பட்ட வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட சில தனியார் வங்கிகள்) பெற்று தொழில் துவங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை. இருப்பினும், ரூ.10.00 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5.00 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மானியம்:
பொதுப்பிரிவினர் விண்ணப்பதாரரின் திட்டமதிப்பீட்டில் (நகர்ப்புறங்களுக்கு) 15% விளிம்பு நிலை மானியமாக(Marginal Money Subsidy) வழங்கப்படும். கிராமபுறங்களுக்கு 25% வரை மானியம் வழங்கப்படும்.
ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு திட்டத்தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) மானியமாக வழங்கப்படும்.
திட்டம் எப்படி செயல்படுகிறது?
தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 5% ஆகவும் இருக்க வேண்டும்.
இதர தொகையினை வணிக வங்கிகள் மூலம் கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்புப் பிரிவினர் பங்களிப்பு 5% | வங்கிக் கடனுதவி 95% | 35% விளிம்பு நிலை மானியம் |
50,000 | 9,50,000 | 3,50,000 |
எனவே,ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டிற்கு சிறப்பு பிரிவினர் தொழில் பங்களிப்பு நிதியாக 50,000 செலுத்தினால் போதுமானது. மானியத் தொகை ரூ. 3,50,000 கடனில் இருந்து கழிக்கப்படும். மீதமுள்ள ரூ.6 லட்சத்திற்கு மட்டும் நீங்கள் வட்டிக் காட்டினால் போதுமானது.
ஆர்பிஐ வழிமுறையின் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு அடமானம் தேவையில்லை.
எப்படி விண்ணப்பம் செய்வது?
பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க kviconline.gov.in/pmegpeportal/ என்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, ஆணையத்தின் நேரடியாக பரிசீலனை செய்து, அவற்றை கடன் வழங்கும் முடிவுகள் எடுப்பதற்காக, நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பும்.
நாடு முழுவதும், ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், பயனாளிகளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் தொழில் முனையும் பட்டியல்/பழங்குடியின மற்றும் பெண்களாக உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship