கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல அரசு வேலைக்கான அறிவிப்புகள் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் தற்போது சில மாதங்களாக அரசு பணிகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
அதே போன்று அதற்கான பணி இடங்கள் குறித்தும், தேர்வு நடத்தப்படும் நாட்களின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிவிப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமானது (ONGC) தற்போது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில், அனைத்து தகுதியும் அனுபவமும் பெற்ற ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி பணியாளர்களுக்கு, உற்பத்தி மற்றும் மின் துறைகளில் இருந்து ஜூனியர் கன்சல்டன்ட்கள் மற்றும் அசோசியேட் கன்சல்டன்ட்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்காக அழைப்பு வந்துள்ளது. இது ஒரு வருட காலத்திற்கான பணி வாய்ப்பு என்பதையும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 2022 ஆண்டில் 36 காலி பணியிடங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே தகுதி உள்ளவர்கள் இந்த அரிதான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜூனியர் கன்சல்டன்ட் பணி இடத்திற்கு 14 காலி இடங்கள் உள்ளன. அடுத்தாக அசோசியேட் கன்சல்டன்ட் பணி இடத்திற்கு 22 காலி இடங்கள் உள்ளன. எனவே மொத்தம் 36 காலி இடங்களாகும். இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க சில கல்வி தகுதிகளும் தேவைப்படுகிறது. அதன்படி, சர்பேஸ் குழுவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில் உற்பத்தி துறையில் E3 முதல் E5 வரையிலான ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள், சர்பேஸ் இன்ஸ்டாலேஷன் பற்றிய அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
அடுத்தாக எலக்ட்ரிக்கல் துறையில், E3 முதல் E5 வரையிலான ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள், எலக்ட்ரிக்கல் அமைப்புகளைப் பற்றிய அனுபவத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதில் பொறியியல் சேவைகள் குறித்த வேலையில், ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள் E3 நிலை வரையிலான மின் துறை சார்ந்த பொறியியல் சேவைகளில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த பணி இடங்களுக்கு 65 வயதுக்கும் குறைவான வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Also Read : 100 நாள் வேலை போன்று சென்னையில் புதிய திட்டம் அறிமுகம்..
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விளம்பரத்தின் இணைப்பு-1'இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் முறையாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதாவது BHARGAVA_VIKAS@ONGC.CO.IN என்கிற மின்னஞ்சலை பயன்படுத்தி மார்ச் 30, 2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான தேதி, இடம் மற்றும் அறிக்கையிடல் நேரம் ஆகிய தகவல்கள் அனைத்தும் தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
Also Read : 8ம் வகுப்பு தகுதிக்கு அரசு வேலைவாய்ப்பு
அசோசியேட் கன்சல்டன்ட் பணிக்கு (E4 & E5 நிலை) ரூ. 66, 000 சம்பளம் தரப்படுகிறது. மேலும் இத்துடன் அலுவல் ரீதியான இதர செலவுகளுக்கு உரிய தரவுகளை சமர்ப்பித்து அதிகபட்சமாக ரூ. 2000 பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது. அடுத்து ஜூனியர் கன்சல்டன்ட் (E3 நிலை வரை) பணிக்கு ரூ. 40,000 சம்பளம் தரப்படுகிறது. இத்துடன் அலுவல் ரீதியான பிற செலவுகளுக்கு உரிய தரவுகளை சமர்ப்பித்து அதிகபட்சமாக ரூ.2000 பெற்று கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.