காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்புக் கூட தற்காலிகமானது தான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு நேரடி நியமனத்தைத் தொடராத அரசு நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தது.
முன்னதாக, 01.03.2018 அன்று, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், பெங்களூர் மருத்துவமனைக் கல்லூரியில் உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த வினய் குமார் (வழக்கின் மனுதாரர்) என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், 2015 வருட பணி நியமனங்கள் விதிமுறையின் படி, மருத்துவர் கமலா என்பவரை பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக இஎஸ்ஐ நிர்வாகம் பதவியுயர்வு செய்தது. காலிப்பணியிடங்கள் நிர்ப்பப்பட்டதால், 01.03.2018 அன்று வெளியான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, இஎஸ்ஐ நிர்வாகத்தின் இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து நிர்வாக தீர்ப்பாயத்திடம் மனுதாரர் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ’நிர்வாகத்தின் செயல்பாடுகள் மனுதாரின் சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, நேரடி நியமன செயல்முறையை தொடங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரபட்ட மேல்முறையீட்டு வழக்கில், 45 நாட்களுக்குள் நேரடி நியமனத்தைத் தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு
இந்த தீர்ப்பை எதிர்த்து, இஎஸ்ஐ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் கேஎம் ஜோசப், ஹிருஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்புக் கூட தற்காலிகமானது. இறுதி உத்தேசப் பட்டியல் கூட தற்காலிகமானது தான். ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு நேரடி நியமனத்தைத் தொடராத அரசு நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அதேசமயம்,
வேலை வழங்குவோர் தவறாகவும், நியாயமற்ற வகையிலும் நடந்து கொள்வது என்பது வேறு. நாம், இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்" என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.