ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

விரிவுபடுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை : வேலைவாய்ப்பு நிலவரங்கள் என்ன?

விரிவுபடுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை : வேலைவாய்ப்பு நிலவரங்கள் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பூமி வெப்பநிலைக்கு அடிப்படைக் காரணமாக  திகழும் கார்பன் வெளியற்றங்களைக் குறைக்கும் விதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த ஆண்டில் மட்டும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் இந்தியாவில் 8 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக IRENA என்ற  ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சூரிய மின் தகடுகளின்  (Solar photovoltaic) மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் கூறப்பட்டுளளது.

  மனித செயல்பாடுகள் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பூமி சூடேறி  (Global warming) வருவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் (Climate change) உலக நாடுகளும், குறிப்பாக இந்திய போன்ற தெற்காசிய நாடுகளும் பேராபத்தை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. பாரிஸ் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இந்த நூற்றாண்டுக்குள் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி சென்டிகிரேடு அல்லது முடிந்தால் 1.5 சென்டிகிரேடு அளவுக்குள் கட்டுபடுத்துவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  பூமி வெப்பநிலைக்கு அடிப்படைக் காரணமாக  திகழும் கார்பன் வெளியேற்றங்களைக் குறைக்கும் விதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2021ல் மட்டும் 257 கிகாவாட் மின்சார புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகின் ஒட்டு மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார உற்பத்தி 3,068 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது.     

  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை என்பது அரசு மற்றும் சந்தை நிறுவனரீதியான ஆற்றலுடன் (Institution capacities) தொடர்புடையவை. பண வீக்கம், உற்பத்திவரி ஊக்குவிப்பு, வர்த்தக தடை, தொழில்நுட்ப  பரிமாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் இத்துறையின்  வளர்ச்சியையும், அது சார்ந்த வேலைவாய்ப்புகளையும் தீர்மானித்து வருகின்றன. எனவே,  IRENA அமைப்பின் தற்போதைய அறிக்கை, உலக நாடுகள்  மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை வலியுறுத்துவதாக உள்ளது.

  வேலைவாய்ப்பு விவரங்கள்:

  2021ம் ஆண்டில் உலகளவில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் 1 கோடியே 27 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையில், மூன்றில் 2 பங்கு வேலைவாய்ப்பு  ஆசியாவில் ஏற்படுத்தப்பட்டதாகவும், சீனாவின் பங்கு மட்டும் 42% என்றும்  கண்டறியப்பட்டுள்ளது.  எரிசக்திதுறை வேலைவாய்ப்பு வளர்ச்சியில்,  சூரிய மின் ஆற்றலின் பங்கு அதிகரித்து வருகிறது.

  உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்பில், கிட்டத்தட்ட 43 லட்சம் பேர் சூரிய மின் தகடு மின்சார உற்பத்தியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 13 லட்சம் பேர் காற்று மின்சாரத் துறையிலும், 24 லட்சம் பேர் நீர்மின் உற்பத்தியிலும், 24 லட்சம் பேர்  உயிரி எரிபொருள் துறையின் கீழும் பணியமரத்தப்பட்டுள்ளனர்.

  இந்தியாவில் கடந்தாண்டில் 8,63,000 பேர் இத்துறையின் கீழ் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும்,  இதில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சூரிய மின்ஆற்றல் துறையின் கீழ் பணியமரத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தியை 500 ஜிகாவாட் இலக்கை அடைய வேண்டுமென்றால், 34 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை இந்தியா  உருவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.    பணியாளர்களுக்கான சமூக பாதுப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறித்தியுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Jobs, Recruitment