வொயிட் காலர் எனப்படும் மிக சிறப்பான வேலைவாய்ப்புகள் கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி வரும் லிங்க்டு இன் மற்றும் இதர முன்னணி நிறுவனங்களின் தரவுகளில் இருந்து இந்த விவரம் தெரிய வந்துள்ளது. அதாவது, மே மாதத்தில் 3,30,000 வேலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஓராண்டில் 61 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 லட்சத்து 5ஆயிரமாக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மே மாத எண்ணிக்கை என்பது 8 சதவீதம் அதிகமாகும். கொரோனாவுக்கு முந்தைய சமயத்தில் சராசரியாக காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரமாக இருந்தது.
எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு :
தங்கும் வசதி மற்றும் சுற்றுலா, உற்பத்தி துறை, சுகாதாரம், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் ஆற்றல் துறை, மீடியா மற்றும் விளம்பரத் துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட துறைகளில் பெருகிய வேலைவாய்ப்புகள் காரணமாகவே ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் பணியிடங்கள் கூடுதலாக அதிகரித்துள்ளன. இதேபோன்று கல்வி, மருந்து துறை, சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகிய துறைகள் சார்ந்தும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read : எஸ்.பி.ஐ வங்கியில் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு சரிவு :
மே மாதத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை, இன்டர்நெட் சார்ந்த சேவை துறைகள் போன்றவற்றில் 11 சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ள போதிலும், மற்ற ஒயிட் காலர் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
பெருநகரங்களில் எவ்வளவு வேலைவாய்ப்பு :
இந்தியாவின் முதன்மையான 5 பெருநகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஒட்டுமொத்தமாக 1,90,000 வேலைவாய்ப்புகள் உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 103 சதவீதம் அதிகமான வளர்ச்சி ஆகும். கொரோனா காலம் முடிந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்தை திறந்து வருகின்றன. இதையொட்டி கடந்த 6 மாதங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஹைப்பிரிட் மற்றும் ரிமோட் மாடல் வேலைவாய்ப்புகள் :
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட ரிமோட் என்னும் வீட்டில் இருந்து வேலை பணி செய்யும் மாடல் மற்றும் வீட்டில் இருந்து சில நாட்கள், அலுவலகத்தில் இருந்து சில நாட்கள் என பணிபுரியும் ஹைப்பிரிட் முறை ஆகிய இரண்டும் பிரபலம் அடைந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளை ஒப்பிடுகையில் இந்த வேலைவாய்ப்புகளின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ரிமோட் மற்றும் ஹைப்பிரிட் மாடல் வேலைவாய்ப்புகள் 47,000ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 53,000 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.