குரூப் 2 முதன்மைத் தேர்வில் தரவரிசைக்கு முக்கியமானதாக கருதப்படும் இரண்டாம் தாள் எவ்வித இடர்பாடுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக நடைபெற்று முடிந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகவும், அத்தேர்வை ரத்து செய்து விட்டு, உடனடியாக மறுதேர்வினை நடத்த வேண்டும் என்றும் தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர்.
முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவிகிதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்.
இதையும் வாசிக்க: அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கோச்சிங்: தாட்கோ அறிவிப்பு
தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-II தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC