கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
2022 ஜுலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. குரூப் 4 பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குரூப் 4 தேர்வு முடிவுகள் 2022 அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி 2022 டிசம்பர்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2023ம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை (Annual Recruitment Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வு அட்டவணையில் , குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளியிடப்படும் என்றும் தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
இந்த தேர்வு திட்டத்துக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தனர். 2023 ஆண்டுக்குள்ளாகவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான், நடந்து முடிந்த 2022 குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7301 பணியிடங்களுடன் கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையலாம் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.
எனவே, உயர்த்தப்பட்ட காலியிடங்கள் எண்ணிக்கையுடன் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, குரூப் 4 தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் வாசிக்க:
பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி பணிகள்... முழு விபரம் இதோ!
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... இந்த தேர்வுகளிலும் கவனம் செலுத்துக..
TNPSC குரூப் 4 தேர்வு; தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? - வெளியான அப்டேட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC