Village Assistant Recruitment: கிராம உதவியாளர் பணி நியமனங்களில் விதிகள் முறையாக பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரிஸ்மலா என்பவர் மனு தொடுத்துள்ளார்.
முன்னதாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, வாசிப்பு தேர்வு/திறன் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வாட்டாச்சியார்களால் வழங்கபபட்டது .
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த சிதம்பராபுரத்தை சேர்ந்த பிரிஸ்மலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர், அந்த மனுவில்," தனது கணவர் கடந்த 2021-ம் ஆண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் கணவரை இழந்து ஆதரவற்ற பெண்களுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக கடந்த 2021ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோல் கடந்த 1976ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆதரவற்ற விதவைகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் தமக்கு கிராம உதவியாளர் பணி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தாகவும், அதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமது மனுவை பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த பணிக்கு, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்தேன். இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பில், முன்னுரிமை அரசாணைகளை பின்பற்றுவது குறித்த விவரங்கள் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசின் அரசாணையையும், உயர்நீதிமன்ற உத்தரவையும் பரிசீலிக்காமல் பணி நியமனங்களை மேற்கொண்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு இடஒதுக்கீடு விதிகளை பின்பற்றி கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைரம்சந்தோஷ், " கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் மனுதாரரும் பங்கேற்றார். எழுத்துத் தேர்வு, வாசிப்புத் திறன், நேர்முத்த தேர்வு என ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்கப்பட்டது. எந்த விதிமீறலும் இல்லை" என்று வாதாடினார்
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தாளை முத்தரசு, " கயத்தாறு தாலுகாவில் கிராம உதவியாளர் பணி நியமனத்தில், விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்பட்டதாகவும், எட்டயபுரம் தாலுகாவில் இந்த நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் வாதிட்டார். எனவே பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் முறையிட்டார்.
இதையும் வாசிக்க: ரூ.60 ஆயிரம் சம்பளம்... கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிப்பு
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, " சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படியும், வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்துத்தான் பணி நியமன நடவடிக்கைகள் அமையும்" என்றும் உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment