தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். இதற்கு, கிராமப்புற பெண்களிடம் இந்த திட்டத்தைப் பற்றிய உள்ள விழிப்புணர்வு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 -50% பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். இருப்பினும் நகர்ப்புறத்தோடு ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த சட்டம், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால் , பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.
தமிழகமும்- 100 நாள் வேலை திட்டமும்:
தமிழ்நாட்டில் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. முதற் கட்டமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டு, பின்பு ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, 38 மாவட்டங்களிலும் இந்த 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராம பஞ்சாயத்து மற்றும் அரசுத் துறைகள் மூலம் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் நில மேம்பாடு, மழைநீர் சேகரிப்பு, வறட்சித் தடுப்பு, பாசனக் கால்வாய், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு வருமானம் அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை:
இந்த 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், மூன்றில் ஒரு பங்கு (அதாவது 100 வேலை 33 வேலை) வேலை பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். இது, சட்டப்பூர்வமான தேவையாகும். சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாட்களில், சுமார் 57.19% வேலைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகப்படியான எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை 50%க்கு குறைவாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 85%க்கும் அதிகமாக உள்ளன உள்ளன.
பெண்கள் பங்கெடுப்புக்கு முக்கிய காரணங்கள் என்ன?
1. இந்த திட்டத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறது. இது, இந்த திட்டத்தின் முக்கிய பலமாகும். இன்றைய நவநாகரிக காலத்திலும், தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்பது மைய அகலாக (Fundamental Unit) இருந்து வருகிறது. குடும்பத்திற்கு உள்ளேயும், குடும்பம் சார்ந்த தொழில்களிலும் பெண்கள் சம்பளம் பெறாமல் உழைப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், 100 நாள் வேலைத்திட்டம், பெருவாரியாக கிராமப்புற பெண்களை உழைப்புச் சந்தைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம் குறிப்பாக, சமூகத்தில் பின் தங்கிய பெண்களிடையே அதிகாரமயமாக்கலை ஏற்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் (NREGA Wage Rate) பெறுவது சட்டப்படி உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த ஊதியம் விவசாயத் தொழிலாளர்களுக்கான சந்தை ஊதியத்தை (agricultural market wage rates) விட குறைவானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியாக ஆண்கள் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கூட, பெண்களின் பங்களிப்பு அதிகரித்து காணப்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று, இந்த திட்டத்தில், தலித் உழைப்பாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% ஆக உள்ளது. மாநில மொத்த மக்கள் தொகையில் தலித் மக்களின் எண்ணிக்கை தோராயமாக 20% ஆக உள்ளது. அதாவது, 100 நாள் வேலை திட்டத்தில் அதிகமான தலித் மக்கள் பலனடைந்து வருகிறார்கள். எனவே, நகர்ப்புறங்களிலும் இந்த வேலைவாய்ப்பைக் கொண்டு செல்லும் திட்டம் அவசியமானதாகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.