முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதம் ஏன்... எப்போது வெளியாகும்?

TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதம் ஏன்... எப்போது வெளியாகும்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

கடந்த மார்ச் 3ம் தேதி, டிஎன்பிஎஸ்சி செயல்பாடுகளை சீரமைக்கும், புதிய பாதைகளை உருவாக்கவும் மனிதவள சீர்திருத்த ஆணையத்தை (Human Management Reforms Committee) அமைச்சர் பழனிவேல் தியாராஜன் அமைத்தார்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 முடிவுகளை 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதமாகும் நிலையில் உடனே முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி  தேர்வு தாமதமானது ஏன், அதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், கடந்த 2021ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு:

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் மெத்தனம் காட்டி வருவதாகவும்,  படுதோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். குறிப்பாக, பாமக நிறுவனம் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில், "  குரூப் 4 தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் குரூப் 4 போன்ற ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மறுபுறம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 4 தேர்வு முடிவுகளை (Group 4 Examination) வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், தனது அறிக்கையில், " ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத் தேர்வுகளும் நடைபெறாததால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் வயது மூப்பு ஏற்பட்டு தேர்வு எழுதும் தகுதியை இழந்தனர். தற்போது மீண்டும் தேர்வு எழுதி 7 மாதங்களாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது அவர்களின் வாழ்வினை இருளில் தள்ளுகின்றச் செயலாகும் என்று தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்:

இந்த எதிர்ப்புக் குரல்களை சமாளிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதியன்று விளக்கமளித்தது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதவாது தொடர்பாக பல்வேறு காரண/காரணிகளை அறிவித்தது. முந்தைய ஆண்டுகளை விட, 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக தெரிவித்தது. மேலும், இம்முறை விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே எஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 36 லட்சத்திறகும் கூடுதலாக வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதாகவும், தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.

பிற தேர்வு முடிவுகளும் தள்ளிப்போனது

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு  வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று,  மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான தேர்வு தேதிகளை தள்ளிவைப்பதாக சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குறைந்தது குரூப் 4 போன்ற போட்டித் தேர்வுகளையும், அரசுப் பணியாளர்களுக்கான  துறைத்தோர்வுகளையும், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோன்று, அண்மைகாலமாக  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி, ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு புதிய பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி-யின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல்வேறு அழுத்தங்களை சந்தித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கடந்த மார்ச் 3ம் தேதி, டிஎன்பிஎஸ்சி செயல்பாடுகளை சீரமைக்கும், புதிய பாதைகளை உருவாக்கவும் மனிதவள சீர்திருத்த ஆணையத்தை (Human Management Reforms Committee) அமைச்சர் பழனிவேல் தியாராஜன் அமைத்தார். இந்த குழு, டிஎன்பிஎஸ்சிபணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு உள்ளீடுகளை அளிக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில்தான் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

First published:

Tags: TNPSC