TN Guest Lecturers Recruitment: 2022-23 கல்வியாண்டிற்கு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், 18 கோடியே 95 லட்சம் நிதி ஒப்பளிப்பும் செய்துள்ளது.
புதிதாக நியமனம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்கள், அறிவிக்கப்பட்டுள்ள கல்வியாண்டிற்கு மட்டும் (11 மாதங்களுக்கு) தற்காலிக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ.20,000 வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துளளது.
பணியமரத்தப்படும் விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நடப்பாண்டின் இறுதி நாளான ஏப்ரல் 30ம் தேதி வரை பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த, காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள்/ விண்ணப்பங்கள், சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் அறிவிக்கப்படும்.
தெரிவு முறை:
பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறைகள் 2018-ன்படி உரிய கல்வித் தகுதி பெற்றுள்ளவர்கள் மட்டுமே தகுதியுடையவராக கருதப்படுவர்.
சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தலைமையில், கீழ்க்கண்ட குழுவினரால் கெளரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும்
a) சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்-தலைவர்
b) சார்ந்த மண்டல, மூன்று கல்லூரி முதல்வர்கள் - உறுப்பினர்கள்
c) பணியில் மூத்த ஆசிரியர் / முதல்வர் - உறுப்பினர் (பட்டியல் இனத்தைச் சார்ந்த இணை பேராசிரியர் நிலைக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்).
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், சார்ந்த கல்லூரி அமைந்துள்ள இடத்திலிருந்து 20 அல்லது 25 கி.மீ தொலைவிற்குள் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்ணும், வசிப்பிடமும் ஒன்றாக உள்ள நிலையில் வயதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: 13,404 காலிப்பணியிடங்கள்: கேந்திர வித்யாலயாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு
பின்னணி:
தற்போது அரசு கல்லூரிகளில் 7198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த காலிப்பணியிடங்களை சமாளிக்க, கௌரவ விரிவுரையாளர்களை உயர்கல்வித் துறை நியமித்து வந்தது .
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 5303 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜுலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வி கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப் பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கு காலதாமதமாகு மென்பதால் மாணவர்களின்' நலன் கருதி இடைக்கால நடவடிக்கையாக, 2022-23-ஆம் கல்வியாண்டில், சார்ந்த மண்டல இணை இயக்குநர் வழியாக கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை சுழற்சி -Iல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தற்காலிகமாக 11 மாதங்களுக்கு நியமனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான அனுமதியையும், அடுத்த 5 மாதங்களுக்கு ரூ.18 கோடியே 95 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தும் உயர்கல்வித் துறை ஆணையிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.