ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இன்று அஞ்சல் பணியாளர் தேர்வு : தமிழில் எழுத முடியாது என்ற அறிவிப்பால் தேர்வர்கள் ஏமாற்றம்

இன்று அஞ்சல் பணியாளர் தேர்வு : தமிழில் எழுத முடியாது என்ற அறிவிப்பால் தேர்வர்கள் ஏமாற்றம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் அஞ்சல் துறைக்கான தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வை தமிழில் எழுத முடியாது என்ற அறிவிப்பு, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அவசர வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.

அஞ்சல்காரர், அஞ்சலக உதவியாளர், தபால்பிரிப்பு உதவியாளர், பல்திறன் பணியாளர் உள்ளிட்ட அஞ்சல்துறை பணிகளுக்கு நாடு முழுவதும் நாளை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்பட 15 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டன. இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலம் அல்லது மாநில மொழியில் தேர்வு எழுதலாம் என்று மே மாதம் 16ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் வெளியான அஞ்சல் துறையின் இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் போராட்டங்களில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் என்றும் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

அஞ்சல்துறையில் அதிக அளவு காலி பணியிடங்கள் உள்ளதாகவும், வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவேதான், இந்தியையும், இந்தி பேசுபவர்களையும் அஞ்சல் துறைக்குள் நுழைக்க பார்ப்பதாக போட்டித் தேர்வுக்கான பயிற்றுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத முடியாது என்ற அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

2016-17ம் ஆண்டு அஞ்சல் துறை தேர்வின்போது, வடமாநில மாணவர்கள் தமிழ் பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிரச்னைக்கே தீர்வு ஏற்படாத நிலையில், இந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுத முடியாது என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதேநேரம் என்ன காரணத்திற்காக தேர்வு முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது என அஞ்சல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே நடக்கும் அஞ்சல் பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆசிர்வாதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று அவசர வழக்காக ஏற்று நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த அமர்வு, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. அத்துடன் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Postal Exam