ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை ஏன்? மு.க ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை ஏன்? மு.க ஸ்டாலின் கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு. இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்? என்றும் முதல்வர் வினவியுள்ளார்.   

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இந்தி மொழியை பொது மொழியாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் குடியராத் தலைவர் திரௌபதி முர்முவிடம்  அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியள்ளன.

    மேலும், இந்தி பேசும் மாநிலங்கள் எனும் A பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுளளதாக தெரிவித்தார்.

    மேலும், இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என மத்திய  அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியைப் பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சுறுத்தல் தொனியில் பரிந்துரைகள் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

    எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்:

    இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க  அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் வாசிக்கராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு அறிவிப்பு :யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

    மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு. இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்? என்றும் வினவியுள்ளார்.

    இந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது. அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

           இதையும்  வாசிக்கபள்ளி கல்லூரி மாணவர்கள் அக்டோபர், நவம்பரில் விண்ணப்பிக்கவேண்டிய உதவித்தொகைகள்!   

    தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு. எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

     இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது. இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இதனைத் தமிழ்நாடு மட்டுமல்ல. எங்களின் அண்டை மாநிலங்கள் உள்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய  அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று. இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Education, Hindi Divas, Imposing Hindi