நவரத்னா பொதுத்துறை நிறுவனமான COAL INDIA வில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 250 பணியிடங்களில் ஒரு இடம் கூட நிரப்பப்படவில்லை.
அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு வரும் வீரர்களை தங்கள் நிறுவனங்களில் பணிக்கு சேர்த்துக்கொள்வதாக சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசு பணிகளில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு இடங்களே முறையாக நிரப்பப்படுவதில்லை என்பதை முன்னாள் இராணுவ வீரர்களுக்கான மீள் குடியேற்ற இயக்குனரகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெறும் ராணுவ வீரர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்ய, மீள் குடியேற்றத்திற்கான இயக்குனரகம் (Director General Resettlement ) இயங்கி வருகிறது. முன்னாள் ராணுவ வீரகளுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
இராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மத்திய மாநில அரசு பணிகளிலும், வங்கி, பொதுத்துறை நிறுவனங்கள்,இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இட ஒதுக்கீடு 14 %- 24% என்று பணியிடங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் விதிப்படி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு மத்திய அரசின் ”C” பிரிவு பணிகளில் 10 %, “D” பிரிவில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், துணை ராணுவ பணிகளில் 14.5% முதல் 24.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: அடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு
ஆனால் கடந்த ஜூன் 2021 புள்ளி விவரப்படி 94 பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் சி பிரிவு பணிகளில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் 1.15%, டி பிரிவு பணிகளில் 0.3% மட்டுமே பணி புரிகின்றனர்.
கோல் இந்தியாவில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 251 பணியிடங்களில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. போதிய ஆவணங்களும், திறனும் இல்லை என்பதால் அவர்களை தேர்வு செய்யவில்லை என்று அந்த நிறுவனம் பதிலளிக்கிறது.
மத்திய அரசில் உள்ள 32 துறைகளில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 22,168 பணியிடங்களில் வெறும் 1.60% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 12 இலட்சம் பணியாளர்களை கொண்ட ரயில்வே துறையில் 16,264 முன்னாள் இராணுவ வீரர்கள் பணிபுரிகின்றனர். அதாவது 1.4% மட்டுமே.
இரயில்வேயில் நிரப்பப்படாமல் 24,242 பணியிடங்கள் உள்ளதாகவும் விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2019 படி இராணுவத்தில் பணிபுரியும் 80% பேர் பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளில் இம்மாநிலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் 2 இலட்சம் பேர் வேறு பணிகளுக்காக பதிவு செய்துள்ளனர். அதில் 1.5% பேருக்கு மட்டுமே வேறு பணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்புக்கு இணையான சான்றுகளை பல நிறுவனங்கள் அங்கீகரிக்க மறுப்பதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு சான்றுகள் இல்லை, திறன் இல்லை என்ற பல்வேறு காரணங்களுக்காக அவர்களுக்காக சட்டப்படி வழங்கப்பட்டுள்ள பணியிடங்களே மறுக்கப்படுகிறது. தற்போது 4 ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்து வரும் இராணுவத்தில் இருந்து வெளியேறும் அக்னிபத் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
செய்தியாளர் - தேவபிரியன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.