2022 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜுலை அமர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) இத்தேர்வை
ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடத்தி வருகிறது. அதேபோன்று, மாநில அரசுப் பள்ளிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் தனியே ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகின்றன.
இவற்றில் வெற்றி பெறுவது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, உத்தரவாதமல்ல. எனவே, தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் மீண்டும் மீண்டும் தேர்வெழுத அனுமதியளிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை சிபிஎஸ்சி நடத்தி வருகிறது.
முன்னதாக, தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என நிர்ணயிக்கப் பட்டிருந்ததது. ஆனால், கடந்தாண்டு ஜுன் மாதம்
இந்த சான்றிதழை தேர்வர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ஏற்கனவே ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்று காலாவதியான சான்றிதழ்களை வைத்துள்ள ஆசிரியர்களுக்கும், இது பொருந்தும் என்பதால், இதற்கான உத்தரவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு
தேர்வின் தன்மை:
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
இரண்டு கேள்வித்தாள்களிலும், தலா 150 வினாக்கள் இடம்பெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் முறை, மொழியறிவு, கணிதம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக இவை அமையும்.
இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.
அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://ctet.nic.in என்று அதிகார்ப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.