Home /News /employment /

வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு பின்பற்றுவதில் குழப்பம்..

வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு பின்பற்றுவதில் குழப்பம்..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

நீதிமன்ற உத்தரவில், 1ஆம் வகுப்பு முதல் தகுதிப்படிப்புவரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காக, மாநில பணிகளில் 20% இடஒதுக்கீடு வழங்க 2010ஆம் ஆண்டில் மாநில அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. தமிழக அரசின் ஒரே இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் இருவேறு தேர்வாணையங்கள் வெவ்வேறு விதிமுறைகளை பின்பற்றுகிறது.

தமிழ்வழி இடஒதுக்கீட்டை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பள்ளிக்கல்வியை ஆங்கிலவழியில் படித்தவர்கள்கூட, தொலைநிலைக் கல்வியில் ஒரே ஒரு பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்துவிட்டு தமிழ்வழி இடஒதுக்கீட்டை பயன்படுத்தினர். இதுசார்ந்த வழக்கிற்கு பிறகு, 1ஆம் வகுப்பு முதல் தகுதிப் படிப்பு எதுவோ, அதுவரை தமிழ்வழியில் படித்தால் மட்டுமே தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவர் என்ற புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. இதுகுறித்த வழக்கு ஒன்றிலும், உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டிருந்தது,

நீதிமன்றம் சொன்னது என்ன?

நீதிமன்ற உத்தரவில், 1ஆம் வகுப்பு முதல் தகுதிப்படிப்புவரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஆங்கில வழியில் பட்டம் பெற்றவர்கள், இடஒதுக்கீட்டுக்காக ஒரு தமிழ்வழி பட்டம் பெற்றவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவது அதன் நோக்கத்தை சிதைக்கிறது என்ற கருத்தையும் தனது உத்தரவில் குறிப்பிட்டது.



நீதிமன்ற உத்தரவை சரியாக பின்பற்றுகிறதா TNUSRB?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட உதவி ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பில், தமிழ்வழி இடஒதுக்கீட்டை பெற வேண்டுமெனில், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முதல் இளநிலைப் பட்டம் தமிழ்வழியில் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவதை தமிழ்வழியில் கணக்கில் கொள்ள முடியாது என்பதே அதன் பொருள்.



டி.என்.பி.எஸ்.சி விதிமுறைகளில் என்ன குழப்பம்?

தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் விதமாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கும் “Frequently asked questions” ஆவணத்தில் முதல் பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும் தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.



மற்றுமொரு முரண்?

நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அதற்கான அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை டி.என்.பி.எஸ்.சி பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி-யோ உதவித்தொகை சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

தேர்வர்கள், வல்லுநர்கள் கருத்து என்ன?

தமிழ்வழி இடஒதுக்கீட்டின் டி.என்.பி.எஸ்.சி நடைமுறை குறித்து பேட்டியளித்துள்ள தேர்வர் பாண்டி, “தமிழ்வழி இடஒதுக்கீட்டின் பலனை 1 முதல் 10வரையிலும், மேல்நிலைக் கல்வியையும் அதனைத் தொடர்ந்து முதல் பட்டப்படிப்பை படித்துள்ள தன்னைப் போன்ற தேர்வர்களுக்கே வழங்க வேண்டும்: எனக் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போட்டித் தேர்வு பயிற்சியாளர் ஐயாச்சாமி, ”நீதிமன்ற வழிகாட்டுதலை டி.என்.பி.எஸ்.சி முறையாக பின்பற்றி, 20% இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும், பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வியில் பின்பற்றும் டி.என்.பி.எஸ்.சி., 10ஆம் வகுப்பை தனித்தேர்வராக எழுதி இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்கிறது. இந்த முரண்களை களைய வேண்டியது அவசியமாகிறது” என்கிறார்.

தமிழக அரசின் இருவேறு தேர்வாணையங்கள் வெவ்வேறு விதங்களில் தங்களது விதிமுறைகளை வகுத்திருப்பது, தேர்வர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்க முயற்சித்தபோதும், டி.என்.பி.எஸ்.சி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

- அபிநயா, சிறப்புச் செய்தியாளர்
Published by:Esakki Raja
First published:

Tags: TN Govt

அடுத்த செய்தி