Mission Mode Recruitment at IITM: “யாரும் தகுதி பெறவில்லை" என்ற காரணம் காட்டி,
சென்னை ஐ ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் அறிவிக்கப்பட்ட ஓ,பி.சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்களில் 50 சதவீதம் இடங்கள் (26/ 49 இடங்கள்) நிரப்பப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில், மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், " மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு மீறல்கள் குறித்து தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன்.
21.03.2021 தேதியிட்ட, மக்களவை கேள்வி எண் 2763 மூலம், திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனங்களில், "போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை", ஒருவரும் தகுதி பெறவில்லை" என்ற காரணங்களால் இடஒதுக்கீடு காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதற்கு, மத்திய பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில் நுட்ப கழகங்கள்(ஐஐடி) தன்னாட்சி அமைப்புகள் என்றும், அவற்றுக்கான பணி நியமனங்களில் அரசின் தலையீடு இருக்காது என்ற வினோதமான காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் கீழ், இடஒதுக்கீடு விதிகளை நிறைவேற்றிய கடமை அரசுக்கு உண்டு. தன்னாட்சி பெற்ற அமைப்புகள் என்று கூறி அதனை செல்லாது என்று ஆக்க முடியாது.
தற்போது, சென்னை ஐஐடி பேராசிரியர்களுக்கான சிறப்பு பணி நியமனங்களின் (Mission Mode Recruitment) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், chemical Engineering, Computer science and Engineering, Engineering Design, Ocean Engineering ஆகிய துறைகளுக்கான பேராசிரியர் நியமனங்களில் எஸ்.சி, எஸ்.டி காலியிடங்களில் 50 சதவீதம் இடங்கள் (26/ 49 இடங்கள்) நிரப்பப்படவில்லை. இந்த காலியடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் "
யாரும் தகுதி பெறவில்லை" என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி-ன் கணினி அறிவியல் துறையில் இதுவரை எஸ்சி/எஸ்டி/ஓபிசி வகுப்பினர் யாரும் பேராசிரியராக நியமிக்கப்பட்டதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
எனவே, முதற்கட்டமாக மத்தியக் கல்வி நிறுவனங்கள் அந்தந்த பணி மட்டங்களுக்கான இடஒதுக்கீடு ரோஸ்டர் தொடர்பான விபரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். அதன் மூலம், ஆசிரியர் பணியிடத்தில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்த தகவல் பொது வெளிக்கு வரும்.
மேலும், பேராசிரியர்களுக்கான சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) உரிய முறையில் கண்காணித்து செயல்படுத்திட சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்திட வேண்டும். 2022 செப்டம்பர் மாதத்துக்குள் ஐஐடிகளில் இடஒதுக்கீடு காலியிடங்கள் நிரப்ப வேண்டும் என்ற
காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.