மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்கான ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு அரசமைப்பு 340-வது பிரிவு வழங்கிய அதிகாரத்தின் படி, மத்தியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய நீதிபதி (ஓய்வு) ஜி. ரோகிணி தலைமையில் ஆணையம் ஒன்றை குடியரசுத் தலைவர் அமைத்தார். ஆணையத் தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து பன்னிரண்டு வார காலத்திற்குள் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: அமெரிக்க கல்வி நிறுவனத்தில் ரூ.2.5 கோடி கல்வி உதவித் தொகை: சாதித்த இந்திய மாணவர்..
இருப்பினும், ஆணையம் இதுநாள் வரை தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதன், காரணமாக ஆணையத்தின் பதவிக் காலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுவரை, பன்னிரெண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அரசியமைப்பின் படி, பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (15(4 - ஓபிசி) இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அரசியமைப்பு பிரிவு 15(4)ன் மூலம், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினரே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதே சமயம், அரசியமைப்பு பிரிவு 16(4)ன் கீழ், அரசின் கீழுள்ள பணியிடங்களில் போதிய அளவிற்கு இடம் பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, 16(4) ன் கீழ் அரசு பணியிடங்களில் போதிய அளவு இடம்பெறாமல் இருந்தாலே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதமுடியும்.
இதையும் வாசிக்க: 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி! அன்புமணி ராமதாஸ்
மண்டல் ஆணையக் குழு பரிந்துரை அடைப்படையில், அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசுப் பணிகளுக்கான நியமனத்திலும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 2500க்கும் மேற்பட்ட சாதிகள் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓபிசி பட்டியலில் உள்ள எண்ணற்ற சாதிகள் / சமுதாயங்கள் சேர்ந்தவர்கள்
மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் பயன்பெற வில்லை என்றும், இட ஒதுக்கீட்டுப் பயன்கள் சமச்சீரின்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததது. உதாரணமாக, மத்திய பட்டியலில் உள்ள 900க்கும் மேற்பட்ட சாதிகள்/சமூகங்களுக்கு எந்தவொரு இடஒதுக்கீடு பலனும் கிடைக்கவில்லை என்ற கூறப்பட்டது. இதனையடுத்து, இடஒதுக்கீடு பயன்களில் அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்குவது தொடர்பான ஆணையத்தை மத்திய அரசு அறிவித்தது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகளை கண்டறியும் பணி சிக்கலானதாக உள்ளது என ஆணையம் கருதுகிறது. உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.