Home /News /employment /

அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பு திட்டம் பயன் தருமா? விளக்கும் முன்னாள் அதிகாரி

அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பு திட்டம் பயன் தருமா? விளக்கும் முன்னாள் அதிகாரி

ராணுவத்தில் 
 ‘அக்னிபாத்’ என்னும் குறுகிய கால வேலைவாய்ப்பு!

ராணுவத்தில் ‘அக்னிபாத்’ என்னும் குறுகிய கால வேலைவாய்ப்பு!

Agnipath Scheme: அக்னிபாத் திட்டத்தின் மூலம் அரசு, இந்திய ராணுவம் மற்றும் வீரர்கள் என மூன்று தரப்பும் பயன்பெறுமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய பாதுகாப்பு துறையில் ஆண்டுக்கு 45 ஆயிரம் வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க 'Tour Of Duty' என்ற புதிய வேலைவாய்ப்பு முறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு அக்னி பாத் என பெயரிடப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படாது. அக்னி வீர்(Agniveer) என்றழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

வரிபிடித்தம் இல்லா பணப்பலன் 

பணி காலத்தில் 45 லட்சம் ரூபாய் அளவில் இன்சூரன்ஸும், வீரர்கள் வீரமரணமடைய நேரிட்டால் 44 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் தகுதி அடிப்படையில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 15 ஆண்டுகள் என்ற நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள் மீதமுள்ள 75% பேர் பென்சன் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மாறாக அவர்களுக்கு வரிப்பிடித்தமின்றி 11.4 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பணப்பலன் வழங்கப்படும்.

Indian Army Air Defence College Recruitment
ராணுவத்தில் ’அக்னிபாத்’ என்னும் குறுகிய கால வேலை!


இந்த பணப்பலனும் அரசால் முழுமையாக வழங்கப்படாது. வீரர்களின் மாத ஊதியத்தில் சேவா நிதி என மாதம் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து அதே அளவு தொகையை அரசும் செலுத்தி அதற்கான வட்டியுடன் சேர்த்து 4 ஆண்டுகள் முடிவில் 12 லட்சம் ரூபாய் வரை வீரர்களுக்கு வழங்கப்படும் என்கிறது பாதுகாப்புத்துறை.

ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பாதுகாப்பு துறைக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான 5.25 லட்சம் கோடியில் ஓய்வூதியத்திற்கு மட்டும் 1.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்தால் குறையும் பெருமளவு செலவை தளவாடங்கள் வாங்க பயன்படுத்துவதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது.

அக்னிபாத்தின் பயன்கள்

இந்த திட்டம் குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் வீர் சக்ரா விருது பெற்றவருமான கர்னல் கிருஷ்ண சுவாமியிடம் பேசினோம்.
அக்னிபாத் திட்டத்தை வரவேற்பதாக கூறிய அவர் ஒரு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களிடத்தில் ஒழுக்கம், தேசப்பற்று, ராணுவம் மீதான புரிதலை ஏற்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக இது இருக்கும். 4 ஆண்டுகள் முடிவில் திறன் மிக்க இளைஞர்கள் நிச்சயம் உருவாகுவார்கள் என்கிறார்.

அதேவேளையில் வேலைவாய்ப்பு பற்றி கவலை தெரிவிக்கும் கர்னல் கிருஷ்ண சுவாமி தேர்வு செய்யப்படும் வீரர்கள் அனைவரும் ஜவான் நிலையிலுள்ள டிரைவர், செவிலியர், மெக்கானிக் போன்ற பணிகளில் சேர்க்கப்படுவார்கள், ராணுவத்தில் அதிக அனுபவமுள்ளவர்களே பணி ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டியாக நியமிக்கப்படும் சூழல் உள்ள நிலையில் ஒப்பந்த வீரர்களின் பணி காலத்திற்கு பின் அவர்களுக்கு மத்திய அரசே ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலம் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர ஆலோசிக்க வேண்டும் என கூறுகிறார்.

பள்ளி படிப்பு முடித்தவுடனே ராணுவ பணியில் சேர்ந்தாலும் இளைஞர்கள் தொலைதூர கல்வி மூலம் மேற்படிப்பில் கவனம் செலுத்துவது பணி காலத்திற்கு பிறகான வேலைவாய்ப்புக்கு உதவும் என்றார்.

அரசியல் ரீதியாக அணுகி இந்த திட்டத்தை முடக்காமல் தேசத்தின் வளர்ச்சிக்காக பரிசோதனை முறையில் அக்னி பாத் திட்டத்தின் வெற்றி எந்தளவில் இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் அத்துடன் "எனது இந்தியா பெரியது" என்பதே ராணுவத்தின் ஒரே நோக்கமாக இருக்கும் என்கிறார்.

அக்னிபாத்துக்கு எதிர்ப்பு

ராணுவ வல்லுநர்கள் சிலர் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோர் சமூகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் "தொழில்முறை ராணுவத்தை வளர்க்காமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனியாருக்கு சேவை செய்ய வைக்கும் இந்த தேச விரோத திட்டத்தை கைவிட வேண்டும்" என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில் அக்னிபாத் திட்டம் நமது படையின் செயல்திறனை குறைக்கும். நமது படையின் ஒழுக்கம், மரபு, கண்ணியம், வீரம் ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்வதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் “சிறிது காலம் இராணுவத்தில் வேலை பார்த்துவிட்டு ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு பெரும் பகுதியினர் 22 வயதில் வேலையிழப்புக்கு உள்ளாவார்கள். இது நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்காதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published by:Saravana Siddharth
First published:

Tags: Army jobs, Employment

அடுத்த செய்தி