2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, யுஜிசி நெட் தேர்வு என்றால் என்ன? என்பது குறித்து இங்கு காண்போம்.
உயர்கல்வியில் கற்பித்தல் பணிகள்:
உயர்கல்வித்துறையைப் பொறுத்த வரையில், பேராசிரியர்( Professor), இணை பேராசிரியர் (Associate Professor), உதவி பேராசிரியர் (Assistant Professor) ஆகிய மூன்று வகையில் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உதவிப் பேராசிரியர் பதவிக்கு, முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிஎச்டி பட்டம் பெற்றவர்களுக்கு நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் அனுபவம் கொண்டவர், இணைய பேராசிரியர் பதவிக்கு தகுதியுடையவர். அதேபோன்று, குறைந்தது 10 ஆண்டுகள் இணைப் பேராசிரியராக பணி அனுபவம் கொண்டவர் பேராசிரியர் பதவிக்கு தகுதியுடைவர் ஆவார்.
எனவே, உயர்க்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக வர யுஜிசி நடத்தும் இந்த நெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
நெட் தேர்வு தோற்றம் :
உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் எடுப்பதற்கு தகுதியான நபர்களை கண்டறிவதற்கு இந்த தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. உயர்கல்வி ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பாக 1983ம் ஆண்டு மல்கோத்ரா ஆணையம் முதன்முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித்தேர்வை (National Eligibility Test) பரிந்துரைத்தது. 1986 வருட தேசிய கல்விக் கொள்கையும் உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வை வலியுறுத்தியது.
இதனையடுத்து, இந்தியாவில் 1989ம் ஆண்டு முதல் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு நடத்தி வருகிறது.
பொதுவாக, ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2012க்கு முன்பு நடத்தப்பட்ட நெட் தேர்வுகள் விரிந்துரைக்கும் வகையில் (Subjective Descriptive Answers) இருந்தது. 2012ல் தான், கொள்குறிவகை எழுத்துத் தேர்வாக (Objective Multiple Choice Questions) தேர்வின் தன்மை மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தால், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் என்னிக்காகியும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கின.
உதாரணமாக, 2010 டிசம்பர் மாதத் தேர்வுக்கு தோராயமாக 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2013 டிசம்பர் மாதத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்து.
மேலும், நெட் தேர்வு , இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். காரணங்காணல் (Logical Reasoning), பொது அறிவு (Current Affairs) தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.
இரண்டாவது தாளில், 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கு,குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும்.
சிறந்த பணிச் சூழல்:
உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. உலகில் நான்கு இன்ஜினியர்களில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு மத்தியில், தரமான கல்வித் தகுதிகளை கொண்ட ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது உயர்கல்வி நிறுவனங்களின் கடமை ஆகிறது.
ஆனால், சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, ஆசிரியர் பதவியில் அதிகப்படியான காலியிடங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் 87% பேராசியர் பணியிடங்களும், 76% இணை பேராசிரியர் பணியிடங்களும், 26% உதவி பேராசிரியர் பணியிடங்களும் காலியிடங்களாக உள்ளன. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் கற்பித்தல் பணியில் பிரகாசமான எதிர்காலங்கள் உள்ளன என்பது தெரிய வருகிறது.
மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கை சிறந்த பணிச் சூழல், ஆராய்ச்சி வசதிகள் குறித்து பேசுகிறது.
நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது?
கிராம உதவியாளர், ரேஷன் கடை விற்பனையாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு பெரும்பாலான படித்த இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் வரும் போது, பணி சூழல் மாறும் என்றும் கருதுகின்றனர்.
இதையும் வாசிக்க: ஜேஇஇ தேர்வு என்றால் என்ன? விண்ணப்பிக்கும் முறை விவரங்கள்!
ஆனால், முதுநிலை பட்டம் பெற்ற தேர்வர்கள், ஓராண்டு காலம் முயன்று படித்தால், நெட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்று கூறப்படுகிறது. பிஎஸ்சி, பிஇ,பிடெக் போன்ற இளநிலை பட்டம் பெற்றிருந்தால், ஈராண்டுக்குள் முதுநிலை பட்டம் பெற்று இந்த நெட் தேர்வுக்கு தகுதி பெற முடியும். வேலையில் இருந்து கொண்டே, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை பட்டத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UGC