ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய ஆயுத காவல்படையில் 10% இடஒதுக்கீடு: அக்னிவீரர்களுக்கு பலன் தருமா?

மத்திய ஆயுத காவல்படையில் 10% இடஒதுக்கீடு: அக்னிவீரர்களுக்கு பலன் தருமா?

ஆள்சேர்ப்பு

ஆள்சேர்ப்பு

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய ஆயுத காவல்படையில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய அரசின் புதிய அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. பணிக்கொடை, ஓய்வூதிய பயன்கள் இல்லாமல், வெறும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற இத்திட்டம்  அனுமதிக்கிறது. 

  இந்தியாவின் முப்படைகளிலும் அக்னிபத் திட்டத்தின் கீழ்  ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும், இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள்  என்றும் மத்திய அரசு தெரிவித்தது. எனவே, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 34,500 வீரர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.         

  இதற்கிடையே, அக்னிபத் திட்டம்' மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த  வீரர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படை, அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய ஆயுதக் காவல்படை பிரிவில் ஏற்கனவே முன்னாள் ராணுவப் படை பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருவதால், இந்த புதிய அறிவிப்பு அதற்கு மேல் கூடுதலாக இருக்கும்  என அறியப்படுகிறது.

  துணை ராணுவப் படையில் இருந்த ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுத காவல்படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச் 2011, முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

  மத்திய ஆயுத காவல்படை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐந்து படைப்பிரிவுகள் ஆகும்.  துணைப் படைப் பிரிவுகளாக இருந்த மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை  இந்தோ - திபெத்திய எல்லைக் காவல், மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB) ஆகிய ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுத காவல்படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச் 2011, முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது   

  சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 10,84,430 ஆகும். 01.03.2020 நிலவரப்படி, பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 9,55,588 ஆக உள்ளது. 1,28,842 பணியிடங்கள் தற்போது வரை காலியாக உள்ளன.   

  இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய ஆயுத காவல்படையில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. 2017ல் 58,396  இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 2020ல் 10,184 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 2019ல் 14,541 இடங்களும், 2018 ல் 30,098 நிரப்பப்பட்டன.

  அக்னிபத் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,  வெறும் 25% வீரர்கள் மட்டுமே அகில இந்திய அளவில் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு மூலம்  ராணுவத்தின் நிரந்தரப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 34000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒப்பந்த காலத்திற்குப்  பிறகு வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10% இடஒதுக்கீடு அறிவிப்பு மிகக் குறைவான இளைஞர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  எனவே, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில்  உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகளை உள்துறை அமைச்சகம்  தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை எஸ்எஸ்சி மேற்கொண்டு வருகிறது. உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான  ஆட்சேர்ப்பு நடைமுறையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

  உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக, அக்னிவீரர்கள் அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் 3 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடைவராவார்கள் என்றும், அக்னிபத் திட்டத்தின் முதல் பேட்ச் வீரர்கள் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடையவராவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

  அதேபோன்று, அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில் சிறப்பு பாடநெறியை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உருவாக்க முன்வந்துள்ளது.

  10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Agnipath, Amit Shah, Army