படிப்பதிலும், அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளாக இருந்தாலும் சரி, தொழிற்கல்வி படிப்புகளாக இருந்தாலும் சரி, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். அதேபோன்று போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதிலும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. அண்மையில் நடந்த சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மிக சிறப்பாக படித்து அதிக ரேங்க் பெற்றவர்களும், அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் மாணவிகளே.
முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 297 என்ற நிலையில், மாணவிகளின் எண்ணிக்கை 434 என்ற நிலை இருந்தது. ஒட்டுமொத்த அளவில் பதக்கங்களை பெற்ற மாணவர்களில் மாணவர்கள் 360, மாணவிகள் 524 பேர். தமிழகத்தின் மற்ற பல்கலைக் கழகங்களிலும் இதேபோன்ற நிலை இருப்பதாக துணைவேந்தர்கள் கருதுகின்றனர்.
ALSO READ | UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
கல்வியில் மாணவிகள் எப்படி துடிப்பாக செயல்படுகிறார்களோ, அதேபோல் வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 21ம் தேதி நடந்து முடிந்த குரூப் 2 போட்டி தேர்வில் ஆண் பட்டதாரிகளை விட, பெண் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் தேர்வை எழுதியுள்ளனர்.
விண்ணப்பித்த 11,78,175 பேரில், 6,81,880 பேர் பெண்கள். அதாவது, 57.87 சதவீதம் பேர். ஆண்களைவிட 1,85,633 பேர் பெண்கள் கூடுதலாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண் பட்டதாரிகள் 4,96,247 பேர் மட்டுமே தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். எனவே, காலியாக உள்ள 5529 பணியிடங்களில் பெரும்பாலான பணியிடங்களை பெண்கள் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.