போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள், அவர்களாகவே தன்னிச்சையாக தயாராகிக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு பயிற்சி ரத்துசெய்யப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நடப்பு கல்வியாண்டிலும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்தி முடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், 2 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், குறைக்கப்பட்ட பாடங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னுரிமை பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், போட்டித் தேர்வுகளுக்கு இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பா? அமைச்சர் அப்டேட்!
அரசு சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் போட்டித் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளதால், அதற்கு முரணாக நீட் பயிற்சி அளிப்பது சரியான நடைமுறையாக இருக்காது என்று அரசு கருதுவதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்திருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீட் பயிற்சி வகுப்புகள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read : சென்னை வாசிகளுக்கு இலவச Wifi - மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படாமலும், அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் மாணவர்களுக்கு வராமலும் இருக்க நீட் தேர்வு பயிற்சியை தொடர வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு போதிய பயிற்சியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றாலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றிலும், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அவசியம் என்பதால், நீட் பயிற்சியை மாநில அரசு தொடர வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, News On Instagram