2011 சட்டப்பேரவை தேர்தலின் போதே இலவச மடிக்கணினிக்கான அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக குறிப்பிட்டு இருந்தன. அதன்படி 2011 சட்டப்பேரவையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி திட்டத்தை தொடங்கி வைத்தது. இதன்படி தமிழக அரசின் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லேப்டாப் உற்பத்திக்கு மிக முக்கிய பொருளாக விளங்குவது லேப்டாப்பின் மூளை எனப்படுகின்ற அதன் (CPU) குறைகடத்திகள் ஆகும் .கொரோனா காலகட்டத்தில் உலகளவில் பொதுமுடக்கம் ஏற்பட்டதன் காரணமாக குறைகடத்தி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியது. இதனையடுத்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து நிலைமை சீரடைந்து வருகின்றது. தற்போது குறைகடத்திகளின் தேவை அதிகம் உள்ள நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் குறைகடத்திகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் குறைகடத்திகளுக்கு உலகளவில் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் இலவச லேப்டாப் வழங்குவதற்கான டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப்புகளை பொருத்தவரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் வாயிலாக டெண்டர்கள் கோரப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் குறைக்கடத்தி உற்பத்தி காரணமாக எல்காட் நிறுவனம் லேப்டாப் உற்பத்திக்காக டெண்டர் கோரியபோதிலும் லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்களில் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ஏற்கனவே லேப்டாப்புகள் வழங்காமல் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப்புகள் வழங்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இலவச லேப்டாப்புகள் வழங்கப்படும் திட்டம் துவக்கப்பட்டத்திலிருந்து 15லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடருமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Tn schools