விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி - சக இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி ’தமிழ்’ முதலிடம்...!

விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி - சக இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி ’தமிழ்’ முதலிடம்...!
  • News18
  • Last Updated: February 21, 2020, 12:10 PM IST
  • Share this:
விக்கிபீடியா தளமானது வேங்கைத்திட்டம் என்ற இந்திய மொழிகளுக்கிடையே கட்டுரைப்போட்டியை அறிவித்திருந்த நிலையில், தமிழ் மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இணையத்தில் ஒரு அறிவுக் களஞ்சியம் என்றால் அது விக்கிப்பீடியா தான். கூகிள்கூட இங்கிருந்தே கொள்முதல் செய்து பயனர்களின் கேள்விக்கு விடையளிக்கிறது. இந்த விக்கிப்பீடியா என்பது தனி நபருக்கோ, தனி அமைப்பிற்கோ சொந்தமானதல்ல இது பொதுவுரிமத்தில் மக்களால் மக்களுக்கு உருவாக்கப்படும் கட்டற்ற கலைக்களஞ்சியம். இதைப் படிக்கலாம், மேம்படுத்தி வெளியிடலாம், நூலாக அச்சடிக்கலாம் என்று அறிவுப்பகிர்வதற்கான அனைத்து வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது.

இதில் அவ்வப்போது கட்டுரைப் போட்டி, ஒளிப்படப் போட்டி, நிரல்போட்டி என்று நடந்து வரும். அதில் குறிப்பாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் 2020 ஜனவரி 10 வரை வேங்கைத் திட்டம் என்று ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.


எதற்காக இந்த கட்டுரைப் போட்டி என்றால், ஒரு காட்டில் எத்தனைப் புலிகள் உள்ளன என்பதைக் கொண்டு அந்தக் காட்டின் இயற்கை வளத்தை கணித்துவிடலாம். அதாவது புலி வாழ்வதற்கான இரை விலங்குகளும், அவை வாழ்வதற்கான புல்வெளிகளும், புல் வளர்வதற்கான நீர் ஆதாரங்களும் என ஒரு தொடர் சங்கிலி அந்தக் காட்டின் சூழலைப் பிரதிபலிக்கிறது. அதுபோல ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை காட்டும்.

இந்திய மொழிகளில் இணையத்தில் அதிகமாகப் புழங்கும் மொழிகளுள் தமிழ் முக்கியமானது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் அதிகரிக்க தமிழ் இணையத்தளங்கள், சமூகத்தளங்கள் என்று பல வழிகள் இருந்தாலும் அவற்றிகெல்லாம் முதன்மையானது விக்கிப்பீடியா. இணையத்தில் எழுதுபவை காலத்தால் அழியாதவை என்றாலும் எழுதப்பட்ட தளத்தின் காலம் முடிகையில் அழிந்து போகக்கூடும்.

இந்த கட்டுரைப் போட்டியில் ஒவ்வொரு மொழியினரும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் முன்னூறு வார்த்தைகளுக்கு எழுத வேண்டும் என்பது தான் போட்டி. நேரடியாக கூகிள் மொழிபெயர்ப்போ அல்லது இதர எந்திர மொழிபெயர்ப்போ பயன்படுத்தக் கூடாது. கடந்த ஆண்டு முதல்முறையாக இந்தப் போட்டி நடந்தது, பன்னிரண்டு மொழியினர் போட்டியிட்டனர் அதில் தமிழ்க் கட்டுரைகளைப் பன்னாட்டுத் தமிழர்களும் எழுதினர் ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடம் தான் பெற முடிந்தது.சர்வதேச மொழிகளுடன் போட்டிப்போட வேண்டிய தமிழ், இந்திய மொழிகளில் முதலிடம் பெறாதது அப்போதைய நிலையாக இருந்தது.

இந்த ஆண்டு அதை முறியடித்து வெற்றிபெற பலர் எழுதினர். அவர்களின் உழைப்பு வீணாகாமல் தற்போது தமிழ் அதிக கட்டுரைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

62 விக்கிப்பீடியர்கள் தமிழ் சார்பாகப் பங்கெடுத்து 2942 கட்டுரைகளை எழுதி, தமிழ் இந்தாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. போட்டிக்காக இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பது பெருமைதான்.





தமிழ் கட்டுரைகளை அளித்தவர்களின் பெயர் பட்டியலை

https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta இந்த இணைப்பில் காணலாம்.


Also See...






First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading