தமிழ்நாட்டில் தற்போது ஜேஇஇ முதன்மை தேர்வு பேசும் பொருளாகியுள்ளது, முன்னதாக, 2023 ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்படாமல் தேர்ச்சி பெற்றதாக மட்டுமே அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் இதர அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எனவே, ஜேஇஇ தேர்வு என்றால் என்ன? அதற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாட்டில் அநேக பெற்றோர்களும், மாணவர்களும் உயர்கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இருப்பினும், உயர்தரமான, வலுவான உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் போதுமான அளவில் கொண்டிருப்பது முக்கியமானதாகிறது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தைத் தாண்டி, உயர்கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சிப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் மிகப் பிராதான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது முக்கியமானதாகும்.
நாட்டின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிராதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது. சிறந்த கற்றல்/கற்பித்த முறைகள், அனுபவமும் திறனும் மிக்க பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு:
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது.
மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE - Advanced) பங்கு பெற முடியும்.
யார் விண்ணப்பிக்கலாம்:
2021, 2022 இல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
BE/BTech படிப்புகளில் சேர்க்கை பெற 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75% பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு (SC/ST) இந்த எண்ணிக்கை 65% ஆகும். மேலும், கணிதம், இயற்பியலை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். வேதியியல்/ உயிரியல்/ உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
B.Arch படிப்புக்கு 10+2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது 10+3 கணிதத்துடன் கூடிய டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
B.planning படிப்புக்கு கணிதத்துடன் 10+2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு திட்டம்:
இந்த நுழைவுத் தேர்வு தாள்களைக் கொண்டது. முதற் தாள் BE/Btech படிப்பதற்காக நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இருக்கும்.
முதற் தாள் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு 'அ' வில் புறநிலை கேள்விகளும், (Multiple Choice Questions) பிரிவு' ஆ' வில் மனக்கணக்கு கேள்விகளும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்கள் ஆகும்.
தேர்வுக்கு தயாராகுவது எப்படி?
12ம் வகுப்பு கணிதம், அறிவியல், வேதியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். வலுவான அடிப்படை கொண்டிருக்க வேண்டும்.
முந்தைய ஆண்டு வினாத் தாட்கள் மூலம் தேர்வின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எழுதுவது நல்லது. JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள, மத்திய கல்வி அமைச்சகம் தேசியத் தேர்வுப் பயிற்சி (நேஷனல் டெஸ்ட் அபியாஸ்) என்னும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் மூலம் உயர்தர மாதிரித் தேர்வுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். தேர்வுகளை சுலபமாகப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவற்றை இணையத் தொடர்பு இல்லாதபோதும் எழுதலாம்.
2023 ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
JEE Main (2023) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெறத் தொடங்கும் தேதி - 15.12.2022 விண்ணப்பிக்க கடைசி நாள் - 12.01.2023 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jee