சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் கட்டாய முகக் கவசம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பள்ளிப் பாடங்களில் மாணவர்கள் பெற்ற அறிவித் திறனை மதிப்பீடு செய்வதற்கு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் பருவங்களில் 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள், பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே, பிரத்தியக மதிப்பெண் வழங்கும் முறை மூலம் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று பரவலின், சமீபத்திய நிலைகளை கருத்தில் கொண்டு, இந்தாண்டு 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில், 12ம் வகுப்புத் தேர்வு 5ம் தேதி (இன்று) தொடங்கி வரும் 28ம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு வழிமுறைகள்:
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய/மாநில அரசுகள் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி அறிவித்தது. இருப்பினும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
இதற்கிடையே, கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர், "முககவசம் அணிவதில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம், பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்று கூறினார்.
இதற்கிடையே, 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். மேலும், இரு தினங்களுக்கு முன்பாக மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முக தடுப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்ற செய்தி அறிவிப்பு வெளியானது.
தேர்வெழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்விக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தற்போது விளக்கமளித்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் கட்டாய முகக் கவசம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. வெளியானதாக சொல்லப்படும் அறிவிப்பு போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.