முகப்பு /செய்தி /கல்வி / Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன?

Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன?

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்விலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதல் நிலைத் தேர்விலும் துணை ராணுவப் படைகள் குறித்து கேள்விகள் இடம்பெறுவது வழக்கம் .

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

எல்லை பாதுகாப்புப் படை: 

இந்திய நாட்டின் பாதுகாவலர் படைக்கு ஒரு உறுதுணை படையாக எல்லை பாதுகாப்புப் படை  செயலாற்றி வருகிறது. இது ராணுவப்படையின் தன்மை கொண்டிருப்பதால் துணை ராணுவப்படை என்றழைக்கப்படுகிறது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ- தீபெத்தியான் எல்லை காவல் படை போன்ற துணை ராணுவப் படைகள்  மத்திய அரசால் சிறப்பு காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆயுதமேந்திய காவல்படையாகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பூட்டான், வங்காளதேசம் மற்றும் மியான்மர்  ஆகிய நாடுகளுடன் பொதுவான நில எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், இலங்கையுடன் பொதுவான கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்கு 1965ம் ஆண்டு இப்படை அமைக்கப்பட்டது. 1968ம் எல்லை பாதுகாப்பு படைச்  சட்டம் 1968 இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. சட்டவிதிமுறைகளை 1969ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது.

ஏன் எல்லை பாதுகாப்புப் படை: 

1965க்கு முன்புவரை இந்திய எல்லைப் பகுதிகளை  அந்தந்த மாநில காவல் படைகளே பாதுகாத்து வந்தன.  எல்லைப் பகுதிகளுக்கு உட்பட்ட மக்களின் உடமைகளை பாதுகாப்பது, கள்ளக் கடத்தல் சம்மந்தமான நடவடிக்கைகளை தடுப்பது போன்ற நடவடிக்கையும் மாநில காவல் படையே  கண்காணித்து வந்தன.

எல்லையில் ஏதாவது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு    அத்துமீறல் நடந்தால் இந்திய ராணுவமும், மத்திய ரிசர்வ் காவல் படையும் குறிப்பிட்ட காலத்திற்கு மாநில காவல்படையை வழிநடத்தி செல்லும்.  இருந்தாலும், இத்தகைய  முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டு வந்தன. திருப்தியில்லாத காரணத்தால்  குஜாரத், ஜம்மு&காஷ்மீர் போன்ற எல்லை மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின. இறுதியில், 1962ம் சீனாவுடனான  எல்லைப் போரில்  இந்தியா படுதோல்வியை சந்தித்தது. சீனப்படைகளை இந்திய நிலைகளை வீழ்த்தின. அப்போதைய பாரத பிரதமர் உடைந்து நொறுங்கிப்  போனார்.  நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் நிலவிய அரசியல் ஸ்த்திரத்தன்மையை அண்டை நாடான பாகிஸ்தான் தனது சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியது. அப்போதைய பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரியை பாகிஸ்தான் மிகவும் தவறாக மதிப்பிட்டது.

1947-48 இந்திய-பாகிஸ்தான் எல்லை போரில் இழந்ததை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பாகிஸ்தான் குஜராத் எல்லை  வழியே தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. 1965 ஏப்ரல் 9ம்  தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் ஆகிய  பகுதிகளை பாகிஸ்தான் இராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும், ரிசர்வ் படையும் களத்தில் இறங்கின. இழந்த பகுதிகளை மீட்டெடுத்தன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1965 நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார்.

இதன் அதிகாரம் என்ன? 

இந்த அமைப்பு ஒரு தலைமை இயக்குநரின்கீழ் இயங்குகிறது. இது ராணுவப்படையின் தன்மை கொண்டது. தானியங்கி ஆயுதங்கள் இப்படையின் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் குதிரைப்படையும் ஒட்டகப் பிரிவும் உள்ளன. இப்படையினர் யுத்த தந்திர செய்தி தகவல்களை சேகரிப்பதிலும், நம் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு உள்ளவர்களின் உயிருக்கும். உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதிலும், கள்ளக் கடத்தல் சம்பந்தமான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், நாட்டிற்கு அழிவு ஏற்படுத்தும் ஊடுருவலைக் கண்காணித்தலும், தடுப்பதிலும் உபயோகப்படுத்தப்படுகின்றனர். விதிமுறைகளின் இப்படைக்கு அளிக்கப்பட்ட அலுவல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. பொது அலுவல்கள் பிரிவு (General Duty Service)

2. மருத்துவ அலுவல்கள் பிரிவு (Medical Service)

3. தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்ப விஞ்ஞான அலுவல்கள் (Technical Service Including communication)

1967 டெல்லி காவல்துறை தர்ணா போராட்டம், 1969 அகமதாபாத் மறியல் போராட்டம், 1974 ரயில்வே மறியல் போராட்டம், பகல்பூர் கலவரம் போன்ற பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்களிழுன் போது  மாநில அரசங்கத்தை வழிநடத்தி  சென்றிருக்கிறது.

சமீபத்திய நிகழ்வு:  2021 அக்டோபர் 11 அன்று, எல்லை பாதுகாப்புச் சட்டத்தின் 13வது பிரிவு  அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,  பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அக்டோபர்  11, 2021 வெளியிட்ட சட்டவிதிமுறைகளின் படி “ எல்லை பாதுகாப்புப்  படையின் அதிகார வரம்பு  மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர்  லடாக் யூனியன் பிரதேசங்களின் அனைத்து பகுதிகளிலும் உள்ளடக்குகிறது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் அசாம் ஆகிய மாநிலங்களில்  இந்தியாவின் எல்லையை ஒட்டிய  ஐம்பது கிலோமீட்டர் வரை இப்படையின் அதிகார வரம்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பட்டியலிடப்பட்ட தனது அதிகார வரம்பின்  கீழ், கடவுச்சீட்டு சட்டம் 1967, 1920 ஆம் ஆண்டின் கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் உள்ள பகுதிகளில் கள்ளக் கடத்தல் சம்பந்தமான நடவடிக்கைகளைத் தடுப்பது , நாட்டிற்கு அழிவு ஏற்படுத்தும் ஊடுருவல்காரர்களை  கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும்.

Know Your Paramilitary | Part 1: Border Security Force

First published: