கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), கடந்த ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் குடிமைப் பணிகள், (பிரதான) தேர்வு 2021 நடத்தியது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொண்டு கொண்டு தேர்வெழுதினர். இதில், கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் எனவே வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மூன்று விண்ணப்பதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் தங்கள் மனுவில், " ஜனவரி 6, 13, 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசின் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள் காரணமாக பிராதான தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. கொரோனா எங்கள் ஒவ்வொருவரையும் தடுத்தி நிறுத்தி விட்டது.
பிராதான தேர்வின் போது தொற்று உறுதி செய்யப்படும் மாணவர்களுக்கு தேவைப்படும் ஏற்பாடுகள் மற்றும் மாற்றுத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. மத்திய பணியாளர் தேர்வாணையம் இதுகுறித்த எந்தவித செயல் திட்டங்களையும் வெளியிடவில்லை.
சட்டத்தின் முன்னர்ச் சமன்மையையும் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது என இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 தெரிவிக்கிறது. மேலும், உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று 21ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது".
NEET Exam 2022 | மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு..
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம் கன்வில்கார் மற்றும் ஏ.எஸ் ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு எழுதாமல் போன விண்ணப்பதார்களுக்கு கூடுதலாக ஒருமுறை தேர்வெழுத சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா? என உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டது.
இந்த வழக்கில் முன்னதாக தனது தரப்பு விளக்கத்தை அளித்த செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம், " எந்த சூழலிலும், எந்த காரணத்திற்காகவும் அறிவிக்கப்பட்ட தேதியில் கலந்து கொள்ள முடியாத விண்ணப்பதார்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது தொடர்பாக எந்த கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது
விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தான் இதில் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்," உச்சநீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டது. கடந்தாண்டு, கொரோனா தொற்று காரணாமாக குடிமைப்பணி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தற்போது, குடிமைத் பணித் தேர்வுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டால், ஏனைய அனைத்து வகையான தேர்வுகளுக்கும் இதேபோன்ற கோரிக்கைகள் வைக்கப்படும். இது, புதிதாக தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பான தற்போதைய விதிகளை மாற்றுவது சாத்தியமாகவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Competitive Exams, Supreme court, UPSC