ஹோம் /நியூஸ் /கல்வி /

UPSC Current Affairs 3: தொலைதூர வாக்கு இயந்திரம் என்றால் என்ன?

UPSC Current Affairs 3: தொலைதூர வாக்கு இயந்திரம் என்றால் என்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

கடந்தாண்டு, ஆகஸ்ட்  மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் பணியை (All India Survey on Migrant Workers) தொடங்கியது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

UPSC Exam Current Affairs: உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் 'தொலைதூர மின்னணு  வாக்களிக்கும் எந்திரத்தை' அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்து வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், இது கவனிக்கப் பட வேண்டிய முன்னேற்றமாகும். எனவே, யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த திட்டத்தைப் பற்றியும், அதற்கான அரசியல்/சமூக/பொருளாதார காரணங்கள் குறித்து அறிந்து வைப்பது முக்கியமானதாகும்.

உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் :  வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டி, உழைக்கும் மக்கள் பல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இத்தகைய புலம்பெயர்நத  உழைப்பாளர்கள்  தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.

உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் பற்றிய கருத்துருக்கள் பல மட்டங்களில் தோன்றினாலும், 2017ல் வெளிவந்த இந்திய பொருளாதார ஆய்வறிக்கை (Indian Economic Survey - India on the Move and Churning: New Evidence) உளநாட்டுள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை பற்றிய சில முக்கிய மதிப்பீடுகளை வழங்கியது. அந்த அறிக்கையில், " 2001- 2011 இடையிலான பத்தாண்டு காலத்தில், இரு மாநிலங்களுக்கு இடையேயான   வருடாந்திர உழைக்கும் மக்கள் நகர்வு சுமார் 60 லட்சம் இருக்கக் கூடும் (annually inter-state labour mobility) என்றும்,  அதன்படி, 2011ல் இருமாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாக இருக்கும்"  என்றும் தெரிவித்தது. நாட்டின் உழைப்புப் சந்தையில் (Labour Market) கிட்டத்தட்ட 17% முதல் 29% சதவிகிதம் புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என்றும்,  எண்ணிக்கை அளவில் இது 10 கோடிக்கும்  அதிகமாக இருக்கும்" என்றும் தெரிவித்தது.

இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர்.      இத்தகைய மக்கள் தங்களுக்குரிய சுதந்திரங்கள், உரிமைகள் யாவை என்பதை அறியாது வாழ்க்கை  நடத்தி வருவதாகவும், புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகளை சேகரிக்க மத்திய/மாநில அரசுகள் முன் வரவவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். 

 உங்களுக்குத் தெரியுமா?  1979ம் ஆண்டு, மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயரும் தொழிலாளர்களின் பணிகளை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ், குறைந்தது ஐந்து புலம் பெயர்ந்தவர்களை பணி அமர்த்தும் வேலை அளிக்கும் நிறுவனங்கள் முறையே  பதிவு செய்திருக்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களை ஆட்சேர்ப்பில் ஈடுப்படும் ஒப்பந்தகாரர்கள் அரசிடம் இருந்து உரிமம்  பெற வேண்டும்.ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் இந்த சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வில்லை என்பது கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான் தெரிய வந்தது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்த புலம்பெயர்ந்தோர் குறித்த தரவுகள் இல்லை என்று மத்திய தொழிற்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்  மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் பணியை (All India Survey on Migrant Workers) தொடங்கியது. இந்த பணியின் மூலம்,  புலம் பெயர்ந்தவர்களின் வீட்டுச் சூழல் (household characteristics), சமூக, பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட உள்ளன.  

தொலைதூர வாக்கு இயந்திரம்: 

இந்த சூழலில் தான், உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் முன்னோடி திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துளளது.  இந்த திட்டத்தின் மூலம், புலம் பெயர்ந்த வாக்காளர் வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை. 

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும்.

இருப்பினும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம்கருதுகிறது. உதாரணாமாக, புலம்பெயர்ந்த வாக்காளர்  என்றால் யார்? (தேர்தல் நாளன்று வெளியேற நபர் முதல் நிரந்தமராக வேறு மாநிலங்கங்களுக்கு சென்றவர் வரை), தொலைதூரம் என்றால் என்ன (தொகுதிக்கு வெளியே/மாவட்டத்துக்கு வெளியே/ மாநிலத்துக்கு வெளியே) ஆகியனவற்றிக்கான வரையறைகளை நிர்ணயிப்பது மிகவும் சிக்கலானது என தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது.

இதன் அடிப்படையில், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந் தேதி கூட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காட்டுவார்கள். அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களை 31.01.2023-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: 

UPSC Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

UPSC Current affairs 2 : டிஜிட்டல் வங்கி அலகுகள் என்றால் என்ன?

First published:

Tags: UPSC