யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வில் (2021) வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண்கள் விவரம் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்ற சுருதி சர்மா, முதன்மை (Mains Examination) தேர்விலும், நேர்முகத் தேர்விலும் சேர்த்து மொத்தமாக 1105 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மதிப்பெண் விபரம்:
சுருதி சர்மா: முதன்மைத் தேர்வில் 932 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 173 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அதவாது, மொத்த மதிப்பெண்ணில் (2025) 54.56% பெற்று நாட்டின் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை பிடித்த அன்கிதா அகர்வால், முதன்மைத் தேர்வில் 871 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 179 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மூன்றாவது இடத்தைப் பிடித்த காமினி சிங்லா, முதன்மைத் தேர்வில் 858 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 187 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
பொதுவான விபரங்கள்:
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவலர் பணி, இந்திய வனப்பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளின் மூலம் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கொள்குறி வகையாக நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி செய்யப்படுகின்றனர். இது, வெறும் தகுதி தேர்வாக இருப்பதால், இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
தாய்மொழி, ஆங்கிலம் என ஒன்பது தாள்களை உள்ளடக்கியது முதன்மைத் தேர்வு. 1750 மதிப்பெண்களுக்கு இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். நேர்காணல் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதன்மை (Mains Examination) தேர்விலும், நேர்முகத் தேர்விலும் (Personality Interview) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
முன்னதாக, 2021 யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில், 685 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 126 பேர்இருப்புப் பட்டியலில் (Reserved Candidates) வைக்கப்பட்டனர் (சிவில் சர்வீஸ் தேர்வு விதிகள் எண் -16 (4) & (5)_க்கு இணங்க). இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் தேர்வாகி, பதவிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த பட்டியல் பராமரிக்கப்படுகிறது. 80 பேர் இரண்டாவது இருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
தெளிவுரை வேண்டுவோர், யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.