ஹோம் /நியூஸ் /கல்வி /

UPSC Series 4: உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையின் பங்கு என்ன?

UPSC Series 4: உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையின் பங்கு என்ன?

ஒன்றியப் பட்டியலில் (Union List) 2A-ன் கீழ், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள  படைகளை மாநில அரசின் சிவில் அதிகாரத்திற்கு உதவ நிறுத்தலாம்

ஒன்றியப் பட்டியலில் (Union List) 2A-ன் கீழ், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள  படைகளை மாநில அரசின் சிவில் அதிகாரத்திற்கு உதவ நிறுத்தலாம்

ஒன்றியப் பட்டியலில் (Union List) 2A-ன் கீழ், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள  படைகளை மாநில அரசின் சிவில் அதிகாரத்திற்கு உதவ நிறுத்தலாம்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக  மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளது.  இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

1939ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் வெறும் 2 படைப்பிரிவுகளுடன் (பட்டாலியன்கள் ) இப்படை நிறுவப்பட்டது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ல் மத்திய ரிசர்வ் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.

தற்போது இப்படையின் பிரிவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரில் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பை பேணிக்காத்தல் : 

இந்திய அரசியலமைப்பின் 355வது பிரிவின் படி, மாநிலம் ஒவ்வொன்றையும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பில் இருந்தும், உள்நாட்டுக் குழப்பத்தில் இருந்தும் பாதுகாத்தும், நாட்டின் அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க ஒவ்வொரு மாநில அரசங்கத்தையும் நடத்திச் செல்வதை உறுதி செய்வதை மத்திய அரசின் கடமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

356வது பிரிவின் படி, இந்திய அரசியலமைப்பின் வகையங்களுக்கு இணங்க மாநில அரசாங்கத்தை நடத்திச்  செல்ல இயலாத ஒரு  நிலைமை எழுந்துள்ளது என குடியரசுத் தலைவர் காண்பாரானால் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President Rule ) அமல்படுத்தலாம்.

UPSC Series 3: தேசிய பாதுகாப்புப் படையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

352வது பிரிவின் படி, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதந்தாங்கியோரின்  கிளர்ச்சி (armed rebellion) காரணமாக , நெருக்கடி நிலை எழுந்துள்ளது என குடியரசுத் தலைவர் காண்பாராயின், நெருக்கடி பிரகடனத்தை (Emergency Rule) அமல்படுத்தலாம்.

மேலும், ஒன்றியப் பட்டியலில் (Union List) 2A-ன் கீழ், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள  படைகளை மாநில அரசின் சிவில் அதிகாரத்திற்கு உதவ நிறுத்தலாம். அத்தகைய படைகளின் அதிகாரங்கள்  சலுகைகள்,  பொறுப்புகள்  போன்ற எதனைப் பொறுத்தும் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் தனிநிலை அதிகாரம் கொண்டதாகும்.

Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன?

எனவே, உள்நாட்டுக் குழப்பம் (355), அதனால் மாநில அரசாங்கத்தை நடத்திச்  செல்ல இயலாத நிலைமை (356), ஆயுதந்தாங்கியோரின்  கிளர்ச்சி (352), மாநில சிவில் அதிகாரத்திற்கு உதவுவது (Entry 2A of Union list)  போன்ற அரசியலமைப்பு மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்காகவும், சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை திறம்பட பராமரிப்பதற்கும் மத்திய ரிசர்வ் காவல் படை செயல்பட்டு வருகிறது.

விரைவு அதிரடிப் படை மற்றும் கோப்ரா: 

மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவே  விரைவு அதிரடிப் படையாகும். கலவரம், கூட்ட நெருசல், மீட்பு பணிகள், நிவாரணம் போன்ற நடவடிக்கைகளாய் திறம்பட கையாள்கிறது.

கோப்ரா (COBRA) : 

உறுதிகொண்ட செயலுக்கான அதிரடிப்படை பட்டாலியன் (Commando Battalion for Resolute Action) அல்லது கோப்ரா என்பது இந்தியாவின் நக்சலைடுடன் மோதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு பிரிவாகும்.  இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை இந்த கோப்ரா படைதான் என்று கூறப்படுகிறது.  இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்தியேக கரந்தடிப் போர்முறை தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் நக்சலைட் குழுக்களுக்கு எதிரான தாக்குதலை இப்படை  திறன்பட கையாளுகின்றது.

இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது?

2021ம் ஆண்டு சத்திஸ்கர் மாநிலம் சுக்மா-பீஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள்  நடத்திய கொடூர தாக்குதலில் 22  கோப்ரா படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

மகளிர் படை (Mahila battalions):  நாட்டின் துணை ராணுவப் படைகளில் மகளிர் படை என்ற தனிப் பிரிவை மத்திய ரிசர்வ் காவல்படை கொண்டுள்ளது. தற்போது வரை, ஆறு மகளிர் பட்டாலியன்கள் உள்ளன. 1986ல் முதல் மகளிர் பட்டாலியன் எண் 88 புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, சீன படைகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த 10 மத்திய ரிசர்வ் காவலர்களின் நினைவாக காவலர் வீரவணக்க நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

1965ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி,  இந்திய-பாகிஸ்தான் போரின் போது இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு கம்பெனி கொண்ட 150 வீரர்கள், 1600 படைவீரர்கள் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தை குசராத், கங்ஜர் காட் என்ற இடத்தில் வீழ்த்தினர். இந்த தினத்தை 'வீர நாள்' என்று இந்திய அரசாங்கம் கொண்டாடி வருகிறது.

First published:

Tags: CRPF, TNPSC, UPSC