சர்வதேச அளவில் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் - நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி

நல்லாசிரியர் ஆஷா தேவி

‘என் பள்ளி என் பிள்ளைகள்’ என்ற நினைப்பு இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்கிறார் நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி.

  • Share this:
    இந்திய அரசு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சர்வதேச அளவில் இந்தப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் எனவும் நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

    நாடுமுழுவதும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் 44 ஆசிரியர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரட்டியூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவிக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நல்லாசிரியர் விருது வாங்கும் ஆசா தேவி இது குறித்து கூறுகையில், “இந்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 33 ஆண்டுகால ஆசிரியர் பணிக்கான அங்கீகாரமாக இருக்கும் என இந்த விருதை நினைக்கிறேன். எங்களது பள்ளி ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் இந்தப் பகுதி பிராட்டியூர் மக்கள் வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரட்டியூர் அரசுப் பள்ளி


    இவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த சாதனையை நான் நிகழ்ச்சி இருக்க முடியாது. பிராட்டியூர் மாநகராட்சி பள்ளியில் 2010ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 71 தற்போது 816 மாணவ செல்வங்கள் பயின்று வருகிறார்கள்.

    தற்போது 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம் மேலும் 16 ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் இருக்கிறார்கள். ஒன்றரை வருட காலத்தில் தனியார் பள்ளியில் இருந்து 516 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள். மாணவர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய தரமான கல்வி, மிகச்சிறந்த ஆங்கில பயிற்சிஎங்கள் பள்ளியின் தனிசிறப்பு.

    அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள் ஆனால் ஆங்கில வழிக்கல்வி சரிவர தெரியாததால் முன்னேற முடியவில்லை. எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆங்கில வழிக் கற்றலை பெற்று வருகிறோம். சிலம்பம் கராத்தே விளையாட்டு போட்டி பாட்டுப் போட்டி, பறை இசை கணினி உள்ளிட்ட பத்து வகையான பயிற்சிகளை மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து எங்களது பள்ளியில் இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    இதற்காக பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எங்களது பள்ளி ஆசிரியர்களின் தொகையிலிருந்து பகிர்ந்து கொடுத்து வருகிறோம்.
    எங்கள் பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை மூலமாக உதவித்தொகை பெற்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். எங்கள் பள்ளியின் முக்கியமான நோக்கம் மிகச் சிறந்த தரமான அரசுப்பள்ளி என்கிற நற்சான்றிதழ் அடைய வேண்டும் என்பதுதான்.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பிராட்டியூர் பகுதி மக்கள் எங்கள் பள்ளியை முழுமையாக நம்புகிறார்கள் அதற்கேற்றார் போல் நாங்களும் பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பயிற்சி கொடுத்து வருகிறோம்.



    குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்களுக்கு கற்றல் கற்பித்தலை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொண்டு வருகிறோம். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக பாடத்திட்டங்களை பதிவு செய்து அனுப்பி வருகிறோம். செல்போன் இல்லாத மாணவர்களுக்கு வீதி பள்ளி என்று அவரவர் இருப்பிடமே சென்று பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    கொரோனா காலத்தில் வீடு தேடி சென்று பயிற்சி கொடுப்பதால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஒரு ரூபாய் கூட பள்ளி பயிலும் தொகை வாங்காமல் தற்போது வரை பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்களது பள்ளியில் 50 கணினி மற்றும் 5 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. புதிதாக வரும் மாணவர்களை கவரும் வகையில் கட்டமைப்பு வசதி செய்து உள்ளோம். நல்ல கட்டமைப்பு குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் எங்கள் பள்ளியில் செய்துள்ளோம் அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கொரோனா காலத்தில் எங்களது பள்ளியில் பயிலும் 500 மாணவ மாணவிகளின் குடும்பங்களின், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு 5 கிலோ பொன்னி அரிசி வழங்கினோம்.
    இந்த அரசு பள்ளியை தமிழகத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு.
    தமிழ் எங்கள் மூச்சு ஆங்கிலம் எங்கள் பேச்சு என்பதை மனதில் வைத்து பயின்று வருகிறோம்.

    ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தமிழ்வழிக் கல்விக்கு சிறிதளவும் தொய்வில்லாமல் பெற்று வருகிறோம்.
    மாவட்ட அளவில் எங்கள் பள்ளியின் மாணவச் செல்வங்கள் பேச்சிபோட்டி முதலிடம் வாங்குவார்கள். பாரம்பரிய கலைக்குழு என 60 மாணவர்களை வைத்து நடனம் பறை இசை சிலம்பம் தேவராட்டம் ஒயிலாட்டம் போன்ற பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    தேசிய நல்லாசிரியர் விருது என்பது மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்னும் எனக்கு ஏழு வருடம் ஆசிரியர் பணி இருக்கிறது அந்த ஏழு வருடத்தையும் இன்னும் இதற்குமேல் சிறப்பாக பணிபுரிவேன்.
    சர்வதேச அளவில் பள்ளியை தரம் உயர்த்த பெரும் முயற்சிகளை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கும் முயற்சி செய்வேன்.
    நிறைய திறமையான அரசு பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மனது வைத்தால் மட்டுமே அரசுப் பள்ளியை மிகச் சிறந்த பள்ளியாக மாற்றலாம். தமிழகத்தில், இதற்கு எங்கள் பள்ளிதான் உதாரணம்.



    எனது குடும்பம் ஒரு கண் என்றால் பள்ளி மற்றொரு கண். நான் பள்ளிக்கு காலையில் வந்தால் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்குச் செல்வேன். குடும்பத்தோடு பள்ளி மீது தான் ஈடுபாடு அதிகம், இதற்கு எனது கணவர் எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்புத் தந்தார்கள் அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

    நான்கு பத்து மணிக்கு பள்ளி முடிந்தவுடன், நான் வீட்டிற்கு சென்று இருந்தால் இதுபோன்ற தரம் எனக்கு கிடைத்திருக்காது.
    குறிப்பாக நமது கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மேலும் எங்களது பள்ளியில் காலையில் பிரேயர் நடக்கும் பொழுது ஆங்கிலத்தில் நடைபெறும் இதை பார்ப்பதற்காகவே பிராட்டியூர் மக்கள் நிறைய பேர் வருவார்கள்.

    பள்ளி குறித்து எப்.எம்., சுவர் விளம்பரம் என 5 கிலோ மீட்டருக்கு விளம்பரம், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திருமண அழைப்பிதழ் போல் கொடுத்துள்ளோம். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை நம்ம வீட்டு பிள்ளைகளாக நினைத்தால் மட்டுமே அவர்களை திறம்பட படிப்பு மற்றும் அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி கொடுக்க முடியும்.

    ‘என் பள்ளி என் பிள்ளைகள்’ என்ற நினைப்பு இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும். சமீபகாலமாக அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்காக தமிழக அரசு நிறைய நிதி ஒதுக்கி உள்ளார்கள். கட்டிட வசதிக்காக நிறைய நிதிஉதவி தருகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவிக்கு, மகள் பிரியதர்ஷினி மற்றும்  பேரன் பேத்தி ஆகியோர் கைகுலுக்கியும், முத்தம் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    Must Read : செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    ஆஷா தேவிக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், கௌதம் என்ற மகனும் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஆஷ தேவியின் கணவர் தமிழ்ச்செல்வன் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - இ.கதிரவன்
    Published by:Suresh V
    First published: