மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாதமிருமுறை தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதன்மூலம், இந்தக் கல்வியாண்டிலிருந்து மாத இதழ் வெளியிடுதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, 2022-2023ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறார் பருவ இதழ் மற்றும் ஆசிரியர் மாத இதழ் வெளியிடுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தனது அறிவிப்பில், "மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். மேலும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் 'கனவு ஆசிரியர்' என்ற மாதஇதழ் வெளியிடப்படும். கமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் "என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: UGC-NET தேர்வு தேதிகள் அறிவிப்பு
இந்த சிறார் பருவ இதழ்களில் தேசிய, மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்தார்.
மேலும், இவ்விதழ்களை வகுப்பறைச் சூழலுடன் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அதே போன்று, சமகாலத்தில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், புதுமைகளையும் மாற்றுக் கல்வியியல் சிந்தனைகளையும் ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யவும் கனவு ஆசிரியர் இதழ் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டிலும் தரணியெங்கிலும் உள்ள கனவு ஆசிரியர்கள் குறித்த செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும், ஆசிரியர்களின் படைப்பாற்றலைப் போற்றிப் பாராட்டவும், அங்கீகரிக்கவும் ஆவணப்படுத்தவும் இந்த மாத இதழ் முனையும் என்று தெரிவித்தார்.
ஒரு கல்வியாண்டிற்கு ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு தலா 20 இதழ்களையும் ஆசிரியர்களுக்கான மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஒரு கல்வியாண்டிற்கு 10 இதழ்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக அச்சிட்டு நேரடியாக பள்ளிகளுக்கே சென்று சேரும் வண்ணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தும், இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தும் அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அந்த அரசாணையில், " 202-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7,15,32,834 -ஐ தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து பெற்று செலவினம் மேற்கொள்ள அனுமதியளித்தும், மேலும், எதிர்வரும் கல்வியாண்டுகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஆகும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.