அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஒவ்வொரு குழந்தைக்கும் 4 ஜோடி உடைகள், ஒரு ஜோடி செருப்பு வழங்கப்படும், மலைப்பகுதி குழந்தைகளுக்கு ஒரு ஸ்வெட்டர், மழைக்காலத்தில் பயன்படுத்தும் காலணி ஆகியவையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 19, 2018, 8:04 AM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் அதிநவீன கட்டிடங்கள், வாகனங்கள், சீருடை போன்ற வசதிகள் இருப்பதால், அரசால் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையடுத்து, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.


இதுகுறித்து சமூகநலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத்திட்டத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் 32 மாவட்டங்களிலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 52,933 குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.ஒவ்வொரு குழந்தைக்கும் 4 ஜோடி உடைகள், ஒரு ஜோடி செருப்பு வழங்கப்படும், மலைப்பகுதி குழந்தைகளுக்கு ஒரு ஸ்வெட்டர், மழைக்காலத்தில் பயன்படுத்தும் காலணி ஆகியவையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.எல்கேஜி வகுப்பில் 3 முதல் 4 வயதான குழந்தைகளும், யூகேஜி வகுப்பில் 4 முதல் 5 வயதான குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, மூன்றாம் நபர் மதிப்பீட்டின் அடிப்படையில், இதனை தொடர்வது குறித்து முடிவுசெய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் வருகை, கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை குறித்து இடையிடையே மதிப்பீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also see...

First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்