எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் வரும் கல்வி ஆண்டு முதல் மூடப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தாது என்கிற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் சேர்ந்தனர் .
இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அங்கன்வாடிகளில் ஏற்கனவே மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனை முறைப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளுக்கு குழந்தைகளை மாற்றி எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது மீண்டும் சமூகநலத் துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியிருக்கிறது.
எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அதனை அப்போது பள்ளிக்கல்வித்துறை மறுத்திருந்த நிலையில் நடப்பாண்டில் எல்கேஜி யுகேஜி களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாத நிலையில் மூடப்படுவது உறுதியாக இருக்கின்றது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் சேரலாம் என்றிருந்த மாணவர்கள் தற்போது மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி அதிக கட்டணங்களைச் செலுத்தி சேரக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.. எல்கேஜி யுகேஜி கிளையில் சேர்க்கப்படும் குழந்தைகள் தொடர்ந்து தொடக்க நிலை வகுப்புகளை முடிக்கும் வரையில் அரசுப்பள்ளிகளில் பயிலக்கூடிய நிலை ஏற்படுவதால் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட வரக்கூடிய நிலையில் அத்தகைய நிலையை தவிர்க்க கடந்த ஆட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, எல்கேஜி யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதால் மீண்டும் அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறையும் நிலை உருவாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education department