10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் 10ம் வகுப்பில் 90.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வெற்றி,தோல்வி என்கிற மனப்பான்மை மாணவர்களிடம் இருக்ககூடாது என்றும் , மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1098,14417 என்கிற எண்ணில் ஆலோசனை பெறலாம் எனவும் குறிப்பிட்டார்.
12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.. 10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 85.8 % பேரும் மாணவிகளில் 94.4% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது தெரியவருகிறது. கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100%(கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்) தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: TN SSLC Result: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி: மாணவிகளே அதிகம்
அதேவேளையில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதை தவிர்த்து பார்த்தால் 2018ல் 91.1%, 2019ல் 91.3%, 2020ல் 92.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக, 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வை 42,519 மாணாக்கர்களும் 12ம் வகுப்பு தேர்வை 31,034 மாணாக்கர்களும் எழுதவில்லை மொத்தமாக 73,553 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதவில்லை. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வில் 90,626 மாணவ- மாணவிகளும், 12ம் வகுப்பு தேர்வில் 50,279 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத் தேர்வு விபரமும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:
TN 12th Result: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... உங்கள் மார்க் இங்கே தெரிந்து கொள்ளலாம்
அதன்படி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 25ம் தேதியும் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் துணைத் தேர்வுகள் தொடங்குகின்றன. தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக சான்றிதழை ஜூன் 24ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.