Home /News /education /

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

அருள்செல்வன்

அருள்செல்வன்

Tiruvannamalai CEO suspended : திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள்கள் லீக் ஆன விவகாரத்தில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில், பொதுத்தேர்வு முறையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்தது. மாநில வாரியாக ஒரே வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, வினாத்தாள்களை அச்சடிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

    பொதுவாக சம்பந்தப்பட்ட தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், திருப்புதல் தேர்வு என்பதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. வினாத்தாள் வழங்கும் நடைமுறையை வினாத்தாள் வழங்கும் மையங்களில் உள்ளவர்கள் கடுமையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடைபெறாமல் போனால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் நோக்கில் தனியார் பள்ளிகள் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள்கள் லீக் ஆன விவகாரத்தில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Read More : தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணமே வசூலிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்!

    முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் முறையாக செயல்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதால், அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சஸ்பெண்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியிடை நீக்க காலத்தில் அவர் திருவண்ணாமலையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவ்வாறு வெளியூர்களுக்கு செல்வதென்றால் உரிய உத்தரவைப் பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read :  யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது - நடிகை ரோகிணி

    அத்துடன், பணியிட காலத்தில் அவருக்குரிய ஊதிய பலன்கள் பணியிட காலத்தில் வழங்கப்படுவதற்கு ஏற்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: 12th exam, Thiruvannamalai

    அடுத்த செய்தி