10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பள்ளியில் தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனோ காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாணவர்கள் நீண்ட நாட்கள் வீட்டில் இருந்தபடி பாடங்களை கற்று வந்ததால் எந்த அளவிற்கு மாணவர்கள் பாடங்களை கற்றுத் தேர்ந்து உள்ளனர் என்பதை அறியும் வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் மாதிரி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் உள்ள ஹைடெக் லே மூலம் ஆன்-லைன் வழியில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது அதன்படி முக்கியப் பாடங்களான கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து 30 கேள்விகள் வீதம் 120 கேள்விகள்இடம்பெற இருக்கின்றன. அனைத்து கேள்விகளுக்கான விடைகளை மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பதில் அளிக்க கூடிய வகையில் இடம்பெற இருக்கின்றது.
மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நாளொன்றுக்கு மூன்று குழு 4 நாட்கள் மாணவர்களுக்கு மாதிரி தேர்வை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் பயன்படுத்திய ஆய்வகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் தேர்வு நடைபெறும் போது மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், உரிய இடைவெளியை பின்பற்ற வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.