ஹோம் /நியூஸ் /கல்வி /

நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு

நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை உயர்நீதிமன்ற கிளை

எந்தெந்த பள்ளிகளில் மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற விவரத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளுக்குச் சென்று நேரடி வகுப்புகளில் பயில்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையும், கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக கல்வி கற்க மாணவர்களும், கற்பிக்க ஆசிரியர்களும் நன்றாக பழகிவிட்டனர்.

இந்த சூழலில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளை திறந்த முடிவும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, கொரோனா நோய்த்தொற்றின் 3ஆம் அலை நெருங்கி உள்ளதை கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாக மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆன்லைன் வழி வகுப்புகளிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேரடி வகுப்பிற்கு மாணவர்கள் வர பல்வேறு பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். எனவே பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மற்றொரு மனுவை அப்துல் வஹாபுதீன் தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகி, “கடந்த 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்பின் 60 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பல பள்ளிகளில் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்தப்படுவதாக மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முழுமையான ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

Must Read : கொரோனா பரவல் அதிகரிப்பு: கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்

இதனை அடுத்து, நீதிபதிகள், “எந்தெந்த பள்ளிகளில் கட்டாயமாக மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரவேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்கள் என்ற விவரத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் இந்த விசாரணை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona spread, Madhurai high court, School education