12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
பள்ளி மாணவிகள்
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, அரசு கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் நலன் கருதி அரசு இந்த முடிவு எடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இதேபோல, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில், ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் சூழல் இருப்பதாகவும், தேர்வு மையங்களில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நோய் தொற்றை கருத்தில் கொண்டு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முடிவெடுக்க தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுகாதாரத்துறை, உள்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.