தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு
அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பள்ளி என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!
அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் இந்த திட்டம் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் பள்ளித்திட்டம் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். எனவே கல்வித்துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி ,கடலூர் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுகல் ஆகிய 8 மாவட்டங்களில் முதற் கட்டமாக இத்திட்டம் முதலில் செயல்படுத்தப்படும். அக்டோபர் 18ம் தேதி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.