சேலம்,
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கொள்குறி வகை வினா இடம் பெற்றிருந்ததது. இதற்கு, மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் என்ற நான்கு பதில்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக, ஊடகங்களில் செய்திகள் வந்ததையடைந்து, இந்த நிகழ்வு பேசும் பொருளானது. பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தவறு இழைத்தோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த பாமாக நிறுவனர் ராமதாஸ், "தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது!
இதையும் வாசிக்க: பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி கேட்டவரை மோசமான வார்த்தைகளில் திட்ட தோன்றுகிறது.. திருநாவுக்கரசர்
வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
இதையும் வாசிக்க: எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை
இந்நிலையில், சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்" என்று முதன்மை செயலாளர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.