தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறப்பு.... வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை...

பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக, இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 • Share this:
  கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில், முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1.ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்,

  2. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  3. பள்ளிகளில் உணவகங்கள் செயல்படக் கூடாது எனவும்,

  4. மாணவர்கள் தங்கள் உணவுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. பள்ளி வாகனங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

  சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இலவச பேருந்து பயண அட்டை இல்லை என்றாலும், சீருடையில் வந்தாலே மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் பயணிக்கலாம் என கூறினார்.

  திருச்சியில் தனியார் பள்ளியில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜும், மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் ஆய்வு நடத்தினர்.

  மதுரையில் பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிகளில் போதிய அளவு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  மேலும் படிக்க... NEET | நீட் விடைத்தாள் மோசடி... 40 நாட்களுக்குப்பிறகு சிக்கிய மாணவி..

  இதேபோல் கோவை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், சுகாதார பணிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: