மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை வெளியீடு

7.5 சதவீத உள்இடஒதுக்கீடு அமலாகும்பட்சத்தில், 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும்

  • Share this:
மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த மாதம் 15ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்தும், இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் 7.5% உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.


அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேரின் எதிர்காலம் இதில் இருப்பதாலும், நீதிமன்றம் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டனர்.  பிற மாநிலங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு என்ன நிலை உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கர்நாடகாவில் இதுபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வழக்கறிஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு, கர்நாடகாவில், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு 15 விழுக்காடும், கன்னட மொழியில் படிப்பவர்களுக்கு 5 விழுக்காடும் மருத்துவ சேர்க்கையில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டது.  இந்நிலையில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மனமில்லையா? என கேள்வி எழுப்பினர்.

அப்போது ஆளுநருக்கு அரசு தரப்பில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நவம்பர் 2-ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 45 நாட்கள் காத்திருந்த நிலையில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நடப்பு கல்விண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

7.5 சதவீத உள்இடஒதுக்கீடு அமலாகும்பட்சத்தில், 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading