12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து வழங்கிய ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.
2022 கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டது. அந்தவகையில்
தேர்வு முடிவு வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மாணவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகல் பெற்று பரிசோதித்ததில் மதிப்பெண்களை கூட்டி வழங்கியதில் ஆசிரியர்கள் இழைத்த தவறினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதையும் வாசிக்க: Neet 2022: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... 18 லட்சம் பேர் எழுதுகின்றனர்
உதாரணமாக, வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறை தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவரின் விடைத்தாள் நகலை சோதித்தபோது அம்மாணவர் 96 மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் விடைத்தாள்களைத் எழுதிய ஆசிரியர்கள், அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல் தவறான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்
அதேபோல, இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் நகலை பெற்று சோதித்த பிறகு, அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதேபோல், கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள்களை பெற்று மதிப்பெண்களை பரிசோதித்ததில் அவர் தற்போது 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர், இரண்டாம் நிலை மதிப்பீட்டாளர், முதன்மை மதிப்பீட்டாளர் என ஆசிரியர்கள் தேர்வுத் துறையால் பணியில் அமர்த்தப்படுவர்.
இதையும் வாசிக்க: நாளை நீட் தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? முழு தகவல்
ஆனால் இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் தவறாக பதிவுசெய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது
லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் இவ்வாறு மதிப்பெண்களை முறையாக வழங்க தவறுகின்ற போது பொறியியல், வேளாண், கால்நடை, மருத்துவ அறிவியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் இந்த மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரி இடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய தவறு பல நூறு மாணவர்களுக்கும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மதிப்பெண்களை குறைத்து வழங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.