அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2019-2020 கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1,24,859 இடங்களில் 76, 927 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2020-2021ம் கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1,15,603 இடங்களில்
70, 379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2021-2022ம் கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 1, 07, 874இடங்களில் 56, 687 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளியில் இலவச கல்வி - ஏப்ரல் 20 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது நேர்மறையான போக்கு இல்லை என்று ஆசிரியர்கள் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடக்கத்தில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்த நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து அரசு உரிய ஆய்வை மேற்கொண்டு இத்தகைய போக்கு தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் முழு எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அதிகாரிகள் திட்டமிட்டு மாணவர் சேர்க்கையை குறைப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை குறைவதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு : ஆன்லைன் மூலமாக தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற கருத்தை தெரிவிக்கின்றனர். தனியார் பள்ளிகள் இலவசமாக சேர்த்தாலும், பின்னர் பிள்ளைகளின் கல்வியை காரணம் காட்டி பெற்றோர்களிடம் பணம் கேட்பதால் பெற்றோர்கள் மத்தியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் தர முன் வருவதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது கொரொனோ காலக்கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்ததும் இதற்கு மற்றொரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Private schools